காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாத்திரமே நிறுத்த முடியும் எனத் தெரிவித்த என யாழ்.மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், பொதுமக்களை நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு கோரியுள்ளார்.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாயில் கொட்டப்படுவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை அடுத்து பொது மக்களுடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
15 வருடங்களுக்கு முன்னர் இந்த இடத்தை அப்போதைய யாழ். மாவட்டச் செயலாளர் யாழ். மாநகர சபைக்கு வழங்கினார். இதற்கான உறுதி யாழ். மாநகர சபையிடம் உள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த முடியாது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அல்லது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் மாத்திரமே இங்கு கழிவுகள் கொட்டப்படுவதை நிறுத்த முடியும். மக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் சரியென்றால் நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடருங்கள்.
ஆரம்பத்தில் இப்பகுதியில் முறைகேடாக கழிவுகள் கொட்டப்பட்டமை உண்மை. ஆனால், தற்போது அது திருத்தப்பட்டு முதலமைச்சரின் ஆலோசனையின் படி சரியாக பேணப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் அமர்ந்து தற்போது என்னால் உணவு உட்கொள்ள முடியும்.
நான் சரியான அணுகுமுறையை பின்பற்றுகின்றேன். விடுமுறை தினத்திலும் இந்த இடத்துக்கு வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
நான் சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே இவ்விடத்தில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. புதிதாகக் கொட்டப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.