வடக்கில் ஆவா குழுவை முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புதுறைசார் முக்கியஸ்தர்களே உருவாக்கினர். அந்த ஆவா குழுவே இன்றும் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனினும் அரசாங்கம் இந்த நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இணை அமைச்சரவைப் பேச்சாளர்களான ராஜித சேனாரட்ன, தயாசிறி ஜயசேகர ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.
முதலில் அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிடுகையில்;
வடக்கில் ஆவா குழுவை உருவாக்கியது யார் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தெரியும். கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு முக்கியஸ்தர்களே ஆவா குழுவை உருவாக்கினர். அந்த அரசாங்கத்தில் நாங்களும் இருந்தோம். அதனால் எங்களுக்கு எல்லாம் தெரியும். ஆவா குழுவை இயக்குவது யார்? அதனூடாக எதனை அடைய முயற்சிக்கின்றனர் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதற்கு காசு கொடுத்து இயக்க வைப்பது யார் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்றார்.
கேள்வி: வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவதன் காரணமாகவா இவ்வாறான குழுக்கள் தலைதூக்குகின்றன?
பதில்: (ராஜித) நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். வடக்கில் இராணுவ முகாம்கள் இருந்த காலத்தில் தான் இந்தக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் குழுக்களை யார் உருவாக்கியது, அதனை செயற்படுத்தியது யார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார்.
அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிடுகையில்;
நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க செயற்பாடுகளை குழப்புவதற்கு ஒருசிலர் நடவடிக்கை எடுக்கின்றமை நன்றாகத் தெரிகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மிதவாத அரசியல்தலைவர்கள் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றனர். அந்த நிலைமையைக் குழப்பி சிக்கலை ஏற்படுத்தவே வடக்கில் நெருக்கடிகளை சில தரப்பினர் ஏற்படுத்துகின்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மிதவாத தலைவர்கள் இருப்பதைப்போன்றே ஒருசில இனவாதிகளும் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு நல்லிணக்க செயற்பாட்டை நெருக்கடிக்குட்படுத்துவதற்கு வடக்கில் ஒருசிலர் குழப்பங்களை ஏற்படுத்துவதை நாம் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றோம்.
அதற்கேற்ப நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். அரசாங்கம் இதுதொடர்பில் மிகவும் ஆழமான முறையில் ஆராய்ந்து வருகிறது என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிடுகையில்:
யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஒருசில அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக நீதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அரசாங்கம் தேவையான விசாரணை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன . மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று பொலிஸார் மீதான வாள்வெட்டுத்தாக்குதல் சம்பவத்தில் ஏழுபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் ஐவரையும் அடையாளம் கண்டிருக்கின்றோம் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: .அடையாளம் காணப்பட்டுள்ள ஐவரின் பெயர்களை கூற முடியுமா?
பொலிஸ் பேச்சாளர்: ஐவரை அடையாளம் கண்டிருக்கின்றோம். ஆனால் பெயர்களை கூறுவது விசாரணைகளுக்கு பாதகமாக அமையும்.
கேள்வி: அவர்கள் சிங்களவர்களா? தமிழர்களா?
பொலிஸ் பேச்சாளர்: அந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். தமிழர்கள்.
கேள்வி: ஆவா குழு இன்னும் செயற்படுகின்றதா?
பொலிஸ் பேச்சாளர்: ஆவா குழு தற்போது செயற்படுகின்றதா என்பதை விட கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் முன்னாள் ஆவா குழுவின் உறுப்பினர்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.