லிபியாவில் ஐ.எஸ். அமைப்பால் கடத்தப்பட்ட 21 எகிப்திய கிறிஸ்தவர்கள் தலையை துண்டித்து படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியாகி சில மணி நேரத்தில், ஐ.எஸ். அமைப்பின் தளங்களை இலக்கு வைத்து எகிப்து திங்கட்கிழமை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
லிபியாவிலுள்ள ஐ.எஸ். அமைப்பின் முகாம்கள், பயிற்சி தளங்கள், ஆயுத களஞ்சியசாலை என்பவற்றை இலக்குவைத்து எகிப்திய போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளன.
கடற்கரையோரமாக தலையிலிருந்து பாதம் வரை கறுப்பு ஆடை அணிந்த ஐ.எஸ். குழுவினரால் செம்மஞ்சள் நிற ஆடையணிந்த பணயக்கைதிகள் வரிசையாக அழைத்து வரப்படுவதையும் அதன் பின் அவர்கள் ஐ.எஸ். உறுப்பினர்கள் முன்னர் மண்டியிட்டிருக்க பணிக்கப்பட்ட பின் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதையும் மேற்படி வீடியோ காட்சி வெளிப்படுத்துகிறது.
இந்த வீடியோ காட்சியானது ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி 5 நிமிட வீடியோ காட்சி ‘சிலுவையின் மக்கள், பகைமையான எகிப்திய திருச்சபையை பின்பற்றுபவர்கள்’ என்ற விளக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
பணயக்கைதிகளை கொல்வதற்கு முன் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கத்தியை ஏந்தியவாறு, சிலுவைப் போரில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பை விரும்புவதற்கு மட்டுமே முடியும் என தெரிவித்தார்.
இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக சரியான பதிலடியை எகிப்து கொடுக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி அப்டெல் பட்டாஹ் அல் – -சிஸி சூளுரைத்துள்ளார்.
தீவிரவாத கொள்கையையும் இலக்குகளையும் கொண்ட தீவிரவாத குழுக்களுக்கு எதிராக எகிப்தும் முழு உலகமும் உக்கிர போரை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி தெரிவித்தார்.
மேற்படி கொல்லப்பட்ட எகிப்திய பணியாளர்கள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு லிபியாவிலுள்ள சிர்ட் நகரிலிருந்து கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரியா மற்றும் ஈராக்கிற்கு வெளியில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியமொன்றிலிருந்து வெளியிடப்பட முதலாவது வீடியோ காட்சியாக மேற்படி படுகொலை வீடியோ காட்சி உள்ளது.
எகிப்திய போர் விமானங்கள் லிபியாவில் எங்கு தாக்குதல்களை நடத்தின என்ற விபரம் வெளியிடப்படவில்லை. ஆனால் தாக்குதலை நடத்திய விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக திரும்பியுள்ளதாக எகிப்து தெரிவித்தது.
எகிப்தில் இந்த படுகொலைகளையொட்டி 7 நாள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.