வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துள்ள புலம்பெயர் அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
உலக தமிழ் ஒன்றியம், பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கைத் தமிழ்ச் சங்கம் (அமெரிக்கா), நியூசிலாந்து தமிழ் சமூகம் உள்ளிட்ட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசேனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ள இந்த அமைப்புக்கள் இந்த விவகாரத்தில் சர்வதேச வழிகாட்டலில் அமைந்த விசாரணை அவசியம் என்பதனையும் வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக வட மாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே இந்த பிரேரணைக்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதத்தையும் அனுப்பியுள்ளன.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் புலம் பெயர் அமைப்புக்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது;
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய மனிதப் படுகொலைகள் ஓர்சாதாரண விடயமாகக் கருதப்படக்கூடாது. இலங்கையில் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
உள்நாட்டு ரீதியான விசாரணைப் பொறிமுறைமை குறித்து காலத்திற்குக் காலம் வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும் அவற்றில் எவ்வித முன்னேற்றமும் கிடையாது .
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் உரிய நேரத்தில் உரிய முறையில் அறிவிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில விடயங்களை அவசரமாக செய்துள்ளார். அவர் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகச் செயற்பட்டுள்ளார். அதேநேரம் யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து உள்ளக விசாரணை நடத்தப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் மங்கள சமரவீரவும் அறிக்கையை தாமதப்படுத்து மாறும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஐ.நா.விசாரணை அறிக்கை தாமதமானால் அது பாரிய கேள்விக் குறியாக அமையும்.