தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.
களமாடி வீரச்சாவினைத் தழுவிய வீரமறவர்களுக்கு வீடுகளிலும், கோவில்களிலும், பிரத்தியேக இடங்களிலும் விளக்கேற்றி உணர்வு பூர்வமாக மாவீரர்தினம் நடந்தேறியது.
இந்நிகழ்விற்கு வடக்கில் இரா ணுவமும் பொலிஸாரும் தடைவித்திருந்த நிலையில் இத்தடையினை மக்கள் மீறியும் ஈகச்சுடரேற்றி அஞ்சலியினை செலுத்தினர்.
விடுதலைப்புலிகள் வன்னியுத்த த்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், அவர்கள் கட்டுப்பாட்டு பிரதேசங்கள் அனைத்தையும் இராணுவம் கடந்த 2009 ஆம் ஆண்டு கைப்பற்றிய பின்னரும் இந்த மாவீரர் நினைவு நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்பதில் அரசு முனைப்பாகவிருக்கிறது.
இதனை அடுத்து நேற்று முன்தினம் வன்னியின் பல இடங்களிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டதோடு கண்காணிப்பிலும் ஈடு பட்டிருந்தனர்.
இவை அனைத்தையும் மீறி கடும் இராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் அழுத்தத்திற்கும் மத்தியிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் மாவீரர் நினைவு நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஈகைச் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மக்களுடன் நடை பெற்ற இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டதுடன் கண்ணீருடன் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ரவிகரன் கருத்து தெரிவிக்கையில், இன்றைய நாள் மாவீரர் நாள் (நேற்று முன்தினம்) தமிழ் இனத்தின் தேசிய வாழ்வுக்காக தமது வாழ்வின் சுகங்களை தியாகம் செய்து இந்த மண்ணில் விதையானவர்களே மாவீரர்கள். அவர்கள் எங்கள் மக்களின் பிள்ளைகள்.
இந்நாளில் காலத்தால் சாகாத அந்த காவிய நாயகர்களை பூசித்து எம் நியாயமான உணர்வுகளை உலகின் முன் எங்கள் மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவது மனித நாகரீகம் ஆகும். அந்த உலக பொது நாகரீகத்தையே எங்கள் மக்கள் இன்று நிலை நிறுத்தியிருக்கிறார்கள். இனியும் நிலை நிறுத்துவார்கள் என அவர் உறு திபட தெரிவித்துள்ளார்.