நீண்ட வறட்சிக்குப் பின்னர் வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
வவுனியாவில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்ததோடு குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியாவில் பல பகுதிகளில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் சந்தோசத்தில் உள்ளனர்.
இடி, முழக்கத்துடன் பெய்த மழையினால் வீதியோரங்கள், பள்ளமான பகுதிகளில் நீர் வழிந்து ஓடியதை காணக்கூடியதாக இருந்தது.
நீண்ட கால வறட்சிக்கு பின்னர், இங்கு இவ்வாறு மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழை பொழிவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதால், குறித்த பிரதேசத்தில் உயரமான பகுதிகளில் வாழ்வோர் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யட்டியந்தோட்டை, அம்பகமுவ, கிதுல்கல, வெவல்வத்தை பிரதேசத்தில் 75 – 78 மில்லி மீற்றர் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால், மண் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாடு முழுவதிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் பாரிய மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான, ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக தென் மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மணிக்கு 40 – 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும்
இந்த காலநிலை தொடர்பில் மீனர்வர்கள் மற்றும் கடற்படையும் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.