மிடுக்குக் கொண்ட நல்லூரானுக்கு என் கண்டன அறிக்கை இது !

0
273

நல்லூர் முருகவேற் பெருமானுக்கு இன்று கொடியேற்றம்.

கண்டாமணிகள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, வானுலகம் அதிரும் வண்ணம் அடியார்கள் அரோகரா என்று ஒலி எழுப்ப, சரி காலை 10 மணிக்கு நல்லூர்க் கந்தனின் கொடி ஏறும்.

அவனுக்கென்ன குறை. சண்முகவாசலில் நவதள இராஜகோபுரம், குபேரவாசலில் மிடுக்குடன் எழுந்து நிற்கும் வானுயர் இராஜகோபுரம். போதாக்குறைக்கு ஒவ்வொரு நாளும் தென் பகுதியில் இருந்து அவனை நாடிவருபவர்கள் பக்தியோடு வாங்கிக் கொண்டு வரும் பழவகைகள்.

ஒரு பழத்துக்காக எல்லாம் உரிந்து உரிமைப் போராட்டம் நடத்தியவனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் பால், பழ அபிஷேகம். எப்படி அவன் எங்களைத் திரும்பிப் பார்ப்பான்.

குறை ஏதும் வையுங்கள் என்றால் மாப்பாணரும் கேட்பதாக இல்லை. வருடத்துக்கு வருடம் புதுப்புது ஏற்பாடுகள். ஏலவே செருக்குக் கொண்ட நல்லூர்க் கந்தனுக்கு மேலும் மேலும் அலங்காரம்.

தீபங்கள், ஆலவட்டம், கொடிகள் போதாக் குறைக்கு ஈசான மூலையில் திருவாசகத் தேன் மழை. இதெல்லாம் இருந்தால் அவன் ஏன்? ஏழை என்னைத் திரும்பிப்பார்ப்பான்.

ஆனாலும் ஒன்று சொல்லுவேன். இலட் சோப இலட்ச அடியார்கள் உன்னை நாடி வந்தாலும் நான் வரன்.

உனக்குச் செருக்கென்றால், எனக்கென்ன? கேட்டது தந்தாயா? தமிழர் குறை தீர் என்பதை யாவது நிறைவேற்றிக் கொடுத்தாயா? பிற கென்ன உன்னிடம் நான் வருவது.வில்லெடுத்து, வாள் எடுத்து, மார் நிமிர்த்தி வா முருகா போர் தொடுக்க என்றால் சூரனுக் கும் உன் திருப்பெரு வடிவம் காட்டுவாய்.

ஆனால், கந்தா! வேலா! நல்லூர் முருகா! என்றால் உனக்கு நாங்கள் இளக்கரவு?

ஆகையால்தான் இந்த ஆண்டு உன்னோடு பகிஷ்கரிப்புப் போராட்டம். பகிஷ்கரித்தாலாவது உன் ஆறுமுகத்தில்; பன்னிரு திருவிழியில் ஒன் றாவது எம்மைப் பார்க்குதா? என்று பார்ப்போம்.

நீதிக்கான போராட்டம் ஒன்றுதான் தமிழ ருக்கு ஒரே வழி. அதற்கும் நீதானே வித்திட்டவன்.

உலகெல்லாம் சுற்றி வந்த போது சூழ்ச்சி நடந்தல்லோ உன் அண்ணன் மாங்கனி பெற்றான்.

அம்மையப்பனும் உலகமும் ஒன்றென்று கணக்கு முடித்து, விநாயகன் கையில் கனி கொடுத்த போது,
இது கதை பிழை. சூழ்ச்சி, நாடகம் என் றெல்லாம் அறிக்கை விட்டு; கண்டனம் தெரி வித்து, வீட்டை விட்டு வெளிக்கிட்டு, மலையேறி நின்று தொடர் போராட்டம் நடத்திய உனக்கு எங்கள் குறை புரியவில்லை என்றால், எம் இனத்தின் துயர் யாருக்குப் புரியும்.

ஆகையால், இந்த வருடம் உன்னோடு நான் பேசேன்; உன் முகம் பாரேன். வீட்டை விட்டு வெளிக்கிட்டு குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று ஆக்கிய உன்  னோடுதான் என் பகிஷ்கரிப்புப் போராட்டம். அதற்கான முதற்கட்ட கண்டன அறிக்கைதான் இது.

ஆனாலும் எதிர்க்கட்சிக்கும் அனைத்து  வசதிகளும் ஆளும் தரப்பால் ஆவது போல் எங்கும் எப்போதும் எனைக் காக்கும் உன் பணியை விட்டிடாதே நல்லூர் வேலா.

valampuri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here