மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரைப் பலப்படுத்த முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இங்கிருந்து அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். மணல் ஏற்றுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் தொடர்பாக, ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டார்.
“யாழ். நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியன், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
நீதிபதி இளஞ்செழியன், நீதிவழி நடப்பவர். சிறந்த நீதியை வழங்குபவராக இருக்கின்ற நீதிபதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முற்பட்ட விடயமானது, மிகவும் வேதனையைத் தருவதோடு, எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
“நீதிபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைத் திசை திருப்பும் ஒரு செயற்பாடாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்தை நான் காண்கின்றேன்.
அரசாங்கம், சரியான விசாரணைக் குழு அமைத்து, விசாணையை முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற சூழ்நிலையில், பொலிஸாரின் சிவில் நிர்வாகத்துக்கு மாறாக, விசேட அதிரடிப்படை நிர்வாகத்தைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது.
எமது மாவட்டத்திலிருந்து, விசேட அதிரடிப்படை வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள், எங்களை அச்சுறுத்தி வரும் பல சம்பவங்களை நாங்கள் அறிகின்றோம்.
சிவில் நிர்வாகத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தச் செயற்பாட்டையும் நாங்கள் அனுமதிக்க முடியாது.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் மீது, தீவிர விசாரணை மேற்கொண்டு, அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், சிவில் நிர்வாகம் நடைபெற ஏற்ற வழிமுறைகளை, நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.