நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் இலக்குத் தான் தான் என்பதை மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கிறார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன். நீதிபதி தாக்குதல் இலக்கு அல்ல, அது ஒரு தற்செயலான சம்பவம் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில் நீதிபதி நேற்று மீண்டும் தாக்குதலின் இலக்குத் தானே என்பதை உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சரத் ஹேமச்சந்திரவின் இறுதிக் கிரியைகளில் நீதிபதி நேற்றுக் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாக்குதல் நடந்த விதம் குறித்து விளக்கினார்.
அவர் தெரிவித்ததாவது:
நான் முதலாவது சாட்சி, பொலிஸ் கான்ஸ்டபிள் விமலரத்ன இரண்டாவது சாட்சி, எனது சாரதி மூன்றாவது சாட்சி, தாக்குதலாளி தப்பிச் செல்வதற்காகப் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் நான்காவது சாட்சி.
என்னுடைய மெய்ப்பாதுகாவலரின் இடுப்பிலிருந்து துப்பாக்கியை தாக்குதலாளி உருவியபோது நான் கண்டேன். உடனடியாகக் காரில் இருந்து இறங்கி வந்தேன்.
அந்தநேரத்தில் உப பரிசோதகரும் தாக்குதலாளியும் ஒருவரையொருவர் பிடித்தபடி இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தனர். கழுத்தைப் பிடித்து இறுக்கியபடியும் சட்டையைப் பிடித்திழுத்தபடியும் அவர்கள் காணப்பட்டபோது தாக்குதலாளி தனது வலது கையை மேல் நோக்கி உயர்த்திப் பிடித்திருந்தார்.
அதிலேயே துப்பாக்கி இருந்தது. அதைப் பார்த்ததும் நான் அவர்களுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்தபடியே துப்பாக்கியைக் கீழே போடு என்று சத்தமிட்டேன்.
அதன் பின்னரே உப பரிசோதகரைத் தாக்குதலாளி தள்ளிவிட்டு அவரை நோக்கிச் சுட்டார். பின்னர் என்னை இலக்கு வைத்துத் துப்பாக்கியை நீட்டினார். அப்போது எனது இரண்டாவது மெய்ப் பாதுகாவலர் என் பின்னால் நின்றிருந்தார்.
அவர் உடனடியாக என்னைக் காருக்குள் தள்ளிவிட்டார். அதன் பின்னரே தாக்குதலாளியை நோக்கி அவர் சுட்டார்.
இவ்வளவும் நடந்தது கிட்டத்தட்ட 10 அடிச் சுற்று வட்டாரத்துக்குள்தான். நல்லூர்ச் சந்தி அது. துரதிஸ்டவசமாக அந்த நேரத்தில் அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை.
பொலிஸார் அந்த இடத்தில் பலர் இருந்தனர் என்று இப்போது கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் அப்படி யாரும் இருக்கவில்லை. எனது இரண்டு மெய்ப் பாதுகாவலர்களும் சூடுபட்டு வீழ்ந்து கிடக்கிறார்கள். அவர்களைத் தூக்கி ஏற்றுவதற்கு உதவி செய்யக்கூட அங்கு யாரும் இருக்கவில்லை.
ஒரு நீதிபதியாகிய நானும் எனது சாரதியும்தான் அவர்களைத் தூக்கிக் காரில் போட்டுக்கொண்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றோம். போகும்போதே பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குச் சம்பவம் குறித்துத் தெரிவித்தேன். 11.30 மணிவரை நான் வைத்தியசாலையில் இருந்தேன். 12.20 மணியளவில் உப பரிசோதகர் உயிரிழந்தார்.
இதுதான் அன்று உண்மையில் நடந்தது. நான் சொல்வது உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் சம்பவத்தின் நேரடியான முதல் சாட்சி நான். மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கின்றேன். பொலிஸ் பேச்சாளர் இப்படிச் சொல்வாராக இருந்தால் இந்த வழக்கிலிருந்து நான் விலகத் தயாராக இருக்கின்றேன்.
பேச்சாளர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியமளிக்கட்டும். சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாகவோ முதன்மைச் சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்கு முன்பாகவோ எந்தவொரு கருத்தையும் தெரிவிப்பதற்குப் பொலிஸ் பேச்சாளருக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது.
சந்தேக நபர்கள் என்னவேண்டுமானாலும் சொல்வார்கள்.
என்னுடைய மெய்ப்பாதுகாவலர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை. அவர்களை இலக்கு வைக்கவேண்டிய தேவை ஏதும் இல்லை. அப்படி யாழ்ப்பாண மக்கள் அவர்களை வெறுத்திருந்தால் ஏன் யாழ்.
பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த பொலிஸ் உப பரிசோதகருக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்? இலங்கையின் வரலாற்றில் இப்படி நடந்திருப்பது இதுவே முதற்றடவை.
நான் 20 வருடங்களாக நீதிச் சேவையில் இருக்கின்றேன். கிட்டத்தட்ட 1000 உயிரிழந்த உடல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தியிருப்பேன். யார், எப்படி நடந்துகொள்வார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியும்.
தாக்குதலாளி உப பரிசோதகரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்ததும் உடனடியாகவே சுடுகுழலுக்குள் குண்டை ஏற்றிச் சுட்டார். நேர்த்தியான தொழில் விற்பனம் இல்லாத ஒருவரால் அவ்வாறு இலகுவாக பிஸ்ரலைக் கையாண்டிருக்க முடியாது.
இரண்டு மூன்று தடவைகள் உப பரிசோதகரைச் சுட்டதன் பின்னர்தான் என்னை நோக்கித் துப்பாக்கியை நீட்டினார். அதன் பின்னர்தான் எனது இரண்டாவது மெய்ப் பாதுகாவலர் தனது துப்பாக்கியை “லோட்“ பண்ணிச் சுட்டார்.
தாக்குதலாளி சுட்டபோது எனக்குக் காயமேற்படாததற்குக் காரணம் அவரால் என்னை இலகுவாக இலக்கு வைக்க முடியவில்லை. எனக்கும் அவருக்கும் இடையே உப பரிசோதகர் இருந்தார். என் பின்னால் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் நின்றிருந்தார்.
இப்படி இருக்கையில் யார் இலக்கு என்பதைப் பற்றி இவர்கள் ஏன் தேடிக்கொண்டிருக்கிறார்கள்? யாரையாவது திருப்திப்படுத்துவதற்காக இவர்கள் இப்படிச் செய்கிறார்களா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை-என்றார்.