பாராளுமன்றம் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

0
103

‘மக்கள் ஆட்சிக்கான அரசியல் யாப்பு’ தயாரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பாராளுமன்றத்துக்கு முன்னால்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. தேர்தலின்போது அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய அரசியலமைப்பை தயாரிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தயாரிக்கப்படும் அரசியலமைப்பானது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவாறு இருக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பில் அரசியல் கட்சிகள் தமது பலத்தை உறுதிப்படுத்துவதற்கும், அரசியல் வாதிகள் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதற்கும் வழிவகுக்கும் ஒன்றாக இருக்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

‘எவ்ரல்’ என்ற இளைஞர் அமைப்பு கிராம மட்டங்களில் அரசியலமைப்பு குறித்து நடத்திய கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்று நடத்தியிருந்தது. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து எவ்ரல் அமைப்பைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பலர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

காணிப்பிரச்சினை உள்ளிட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் வகையிலும், அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும். கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எவ்ரல் அமைப்பின் இணைப்பாளர் ரவீந்திர.டி.சில்வா கூறியதாவது: அரசாங்கத்தின் பிரபலத்தன்மை குறைந்து வரும் சூழ்நிலையில், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் சவால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர் அமைப்பு என்ற ரீதியில் மக்கள் மத்தியில் சென்று விரிவாகக் கலந்துரையாடுவது எனத் தீர்மானித்தோம். இதற்கமைய வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் 500 இற்கும் அதிகமான கலந்துரையாடல்களை நடத்தியதுடன், இதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்:அரசியல் கட்சிகள் தமது பலத்தை உறுதிப்படுத்துவதற்கும், அரசியல் வாதிகள் தொடர்ந்தும் அரசியலில் இருப்பதற்குமான அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அரசியலமைப்பின் ஊடாக தமது சாதாரண பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். நூற்றாண்டு காலமாக கிராமங்களில் வசித்து வந்தாலும் தமது காணிகளுக்கான உரிமையை உறுதிப்படுத்தும் சரத்துக்கள் இன்றைய அரசியலமைப்பில் இல்லை. புதிய அரசியலமைப்பின் ஊடாக தமது இவ்வாறான தேவைகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் காணப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்வரை மோசடி நிறைந்த அரசியலை சீர்செய்ய முடியாது. கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் சரி, இந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் சரி மோசடியான அரசியல் செயற்பாடுகளே காணப்படுகின்றன. நிறைவேற்று அதிகாரம் இருக்குமட்டும் அதிகாரப் பகிர்வுவொன்றுக்குச் செல்லவோ சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவோ முடியாது. எனவே புதிதாக கொண்டுவர எதிர்பார்க்கப்படும் அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும் சாதாரண பொது மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு தீர்வொன்றை வழங்குவதாக அரசியலமைப்பு இருக்க வேண்டும். இதற்காக சமூக, பொருளாதாரம் மற்றும் கலாசாரம் என்பன அடிப்படை உரிமைகளாக உள்வாங்கப்பட வேண்டும் என்றார்.

தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையினூடாக ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்ற முடியாது. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில் தற்பொழுதே விதி மீறல்கள் இடம்பெறுவதை மட்டக்களப்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது தெரிந்துகொள்ள முடிந்தது.

இளைஞர்கள் என்ற ரீதியில் பெண்களின் வீதாசாரம் தேர்தல் முறையில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். இதனூடாகவே அவர்களின் உரிமைகளையும் வெல்ல முடியும். அடுத்தது, சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டும். இது போன்ற முக்கிய ஐந்து விடயங்களை வலியுறுத்தியே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளோம். இது ஆரம்பம் மாத்திரமே. மாவட்ட ரீதியில் விழிப்புணர்வு செயற்பாடுகளையும், தேசிய மட்டத்தில் இதுபோன்ற கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

“கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சியினர் தற்பொழுது அரசியலமைப்பு தயாரிப்பு குழுவிலிருந்து வெ ளியேறியுள்ளனர். மறுபக்கத்தில் பௌத்த தலைவர்கள் புதிய அரசியலமைப்புக்கான அவசியம் இல்லையெனக் கூறியுள்ளனர். நானும், சிங்கள பௌத்தன்தான். இளைஞர்கள் என்ற ரீதியில் நாம் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்தோம். நாட்டில் இதுவரை பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படும்போது இந்த மதத் தலைவர்கள் எங்கு இருந்தார்கள் எனக் கேட்கவிரும்புகின்றேன். அரசியல்வாதிகளின் பொறுப்பு அவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதாகவும். இதனை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here