பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயர்.
இதில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என பல வகைகள் உண்டு.
இந்நிலையில், ஆகஸ்ட் 21ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா அறிவித்துள்ளது.
99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் இதுவாகும்.
ஆகஸ்ட் 21 இல் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என நாசா கூறியுள்ளது.
மேலும், இதை வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடாது என்றும் அதற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தைப் பார்க்க முடியும் என்றும் நாசா தகவல் தெரிவித்துள்ளது.
பசுபிக்கிலிருந்து அட்லாண்டிக் வரையான கரைப்பகுதிகளைக் கடக்கும் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டு 99 ஆண்டுகள் ஆகின்றன.
ஜூன் 8, 1918 அன்று முழு சூரிய கிரகணம் வாஷிங்டனில் இருந்து புளோரிடா வரை கடந்தது.
இதன் பின்னர், ஆகஸ்ட் 21 இல் ஏற்படவுள்ள கிரகணத்தை அமெரிக்காவின் 14 மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பார்வையிட முடியும் என நாசா தெரிவித்துள்ளது.