கேப்பாபுலவு காணிகளை இம்மாதத்தினுள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!

0
151

கேப்பாப்புலவில் மக்களுக்குச் சொந்தமான காணியை முற்றாக அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க ஜனாதிபதி இம்மாத இறுதிக்குள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் கோரிக்கை முன்வைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கேப்பாப்புலவு காணி இன்னமும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாததையடுத்து ஆர்.சம்பந்தன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள உத்தியோகபூர்வ கடிதத்திலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கடிதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு காணி தமிழ் மக்களுக்கு சொந்தமானது என்றும், இதில் மொத்தமாக 613 ஏக்கர் காணியும் 02 பாதைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் இவை அனைத்தையும் அதன் உரிமையாளர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புச் செயலாளர், இராணுவ ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் கிரிக்ஷாந்த டி சில்வா, இராணுவத்தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இக்கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது:
தமிழ் மக்களுக்கு சொந்தமான கேப்பாபிலவு காணி நான்கு பிரிவுகளைக் கொண்டவை.இவை முறையே 243 ஏக்கர், 189 ஏக்கர். 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் காணி மற்றும் 02 பாதைகளைக் கொண்டுள்ளன.கடந்த மே (18) நானும் மாவை சேனாதிராஜா எம்.பியும் அக்காணிக்கு நேரில் விஜயம் செய்ததுடன் அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவக் கட்டளை அதிகாரியுடன் கலந்துரையாடினோம்.
அதற்கு அவர், 243 ஏக்கர் காணியை உடனடியாகவும் 189 ஏக்கர் காணியை ஒரு மாதக் காலத்துக்குள்ளும் 111 ஏக்கர் காணியை எதிர்வரும் 06 மாதங்களுக்குள்ளும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், எஞ்சிய 70 ஏக்கர் காணி மற்றும் 02 பாதைகளை விடுவிப்பதிலேயே சில சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.
எனினும் நான் கொழும்பு திரும்பியதும் அப்போதிருந்த இராணுவக் கட்டளை அதிகாரி ஜெனரல் கிரிக்ஷாந்த டி சில்வாவுடன் பேச்சு நடத்தியபோது அவர், 70 ஏக்கர் காணி மற்றும் 02 பாதைகளை விடுவிக்க முடியுமென்றும் அதன்படி அனைத்து காணிகளும் ஜூலை மாதத்திற்குள் விடுவிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
ஜூன் மாதம் (23) தங்களை நான் சந்தித்தபோதும் கேப்பாபிலவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 70 ஏக்கர் காணி மற்றும் 02 பாதைகள் உள்ளிட்ட அனைத்து காணிகளையும் விரைவில் விடுவிக்குமாறு படையினருக்கு கூறும்படி நான் தங்களிடம் கேட்டுக் கொண்டேன். தாங்களும் அதனை நிறைவேற்றுவதாக எனக்கு உறுதியளித்தீர்கள்.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் கடந்த 141 நாட்களாக போராட்டம் நடத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள். போருக்கு முன்னரும் பின்னரும் இம்மக்கள் பாரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே இம்மாத இறுதிக்குள் கோப்பாபிலவு காணிகள் அனைத்தையும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக சம்மந்தனின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here