பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் ஓவிய வேங்கை வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களுக்கான வணக்க நிகழ்வு இன்று (22.07.2017) சனிக்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள சோதியா கலைக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.தமிழின உணர்வாளரும் சிறந்த ஓவியரும் தமிழின அழிப்பின் சாட்சியாக தஞ்சையில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் சிற்பியும் பன்முகக் கலைஞருமாகிய ‘ஓவியவேங்கை” வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களின் நினைவு சுமந்து இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் வணக்கத்தை 12.03.2007 அன்று கரிப்பட்ட முறிப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை யாழ்.நம்பியின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் வணக்கம் செய்து மலர்வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, மாவீரர் பணிமனையின் செயற்பாட்டாளர் திருமதி ஜீவனா அவர்கள் வீரசந்தானம் ஐயா நினைவு சுமந்தகவிதையை வாசித்தளித்தார். அதனையடுத்து, வீரசந்தானம் ஐயா அவர்கள் தொடர்பான காணொளி திரையில் காண்பிக்கப்பட்டது.
சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் ஓவியவேங்கை” வீரமுத்து சந்தானம் ஐயா அவர்களின் நினைவு சுமந்த விடயங்களை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலித்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)