தனது குடிமக்கள் வட கொரியா செல்வதற்கு அமெரிக்கா தடை விதிக்க உள்ளதாக வட கொரியாவிற்கு சுற்றுலா சேவையை இயக்கி வரும் இரண்டு பயண முகமை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இத்தடை குறித்த அறிவிப்பு ஜூலை 27-ஆம் தேதி வெளியாகலாம் என்றும், முப்பது நாட்களுக்குப் பின்னர் இது அமலுக்கு வரும் என்றும் கொரியா டூர்ஸ் மற்றும் யங் பயோனியர் டூர்ஸ் நிறுவனங்கள் கூறியுள்ளன.
வட கொரியாவில் அமெரிக்க விவகாரங்களை கையாளுகின்ற ஸ்வீடன் தூதரகம், இரண்டு பயண முகமை நிறுவனங்களிடம் இதனை தெரிவித்துள்ளது.
தடை குறித்த தகவல்களை அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான மோசமான உறவுகள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்ம்பியரின் மரணம் ஆகியவற்றின் காரணமாக இதற்கான சூழ்நிலைகள் அதிகரித்துள்ளன.
யங் பயோனியர் டூர்ஸ் நிறுவனத்தின் மூலம் வார்ம்பியர் வட கொரியா சென்றார். பிரசார பதாகையை திருடிய குற்றச்சாட்டில், 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட வார்ம்பியருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் கோமா நிலையில் அமெரிக்காவிற்குத் திரும்பிய வார்ம்பியர், ஊர் திரும்பிய ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.