முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டா விநாயகர் கோவிலினுள் நுழைந்த திருடர்கள் தங்கங்கள் மற்றும் அம்மனுக்கு அணிவித்திருந்த பொட்டுத்தாலி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது, கோவில் பூசகர் நேற்று அதிகாலை பூசை செய்வதற்காக வந்தபோது கோவிலின் முன்கதவு திறக்கப்பட்டிருந்ததைக்கண்டு கோவில் நிர்வாகத் தலைவருக்கு உடன் தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த தலைவரும், பூசகருமாக கோவிலினுள் நுழைந்தபோது கூரை ஓடுகளைப் பிரித்து திருடர்கள் உள் ளிறங்கியமை கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிலில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து விக்கிரக கல்களையும் முழுமையாகப் பெயர்த்து சேதப்படுத்தியதுடன் அதன் கீழே கட்டுமானத்தின் போது வைக்கப்பட்ட தங்கங்கள், வெள்ளி, ஐம்பொன் ஆகியவற்றை எடுத்துள்ளமை தெரியவந்தது.
அத்துடன் அம்மனுக்கு அணிவித்திருந்த பொட்டுத்தாலியை திருடியதோடு வெளியே வைக்கப்பட்டிருந்த உண்டியலையும் உடைத்து காணிக்கைப்பணத்தையும் எடுத் துள்ளனர்.
இதனையடுத்து முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அங்கு வந்த அவர்கள் அங்கிருந்த தடயங்களைப் பரிசோதித்ததுடன் கைரேகைகளையும் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.
இதன்போது திருடர்கள் விட்டுச் சென்ற கத்தியயான்றையும் பொலிசார் மூலஸ்தானத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றன.