பிரான்சின் தேசிய தின கொண்டாட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. பல்வேறுபட்ட வாணவேடிக்கைகளும் ஒரேநேரத்தில் இடம்பெற்றமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பல்வேறுநாடுகளின் தலைவர்களும் பிரான்சுக்கு வருகைதந்துள்ளனர்.
இன்று ஜூலை 14, பிரான்சின் தேசிய நாளின் முதல் நிகழ்வு, சோம்ப்ஸ் எலிசேயில் இடம்பெறும் இராணுவ அணிவகுப்பாகும். பிரெஞ்சு தேசத்தின் பெருமைகளையும், அதன் வீரத்தையும் உலகுக்கு பறை சாற்றும் விதமாக இந்த இராணுவ அணிவகுப்பு இடம்பெற்று வருகிறது. இந்த அணிவகுப்பில் மொத்தம் 3, 720 வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
மொத்தம் 211 வாகனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. இந்த எண்ணிக்கையில் 62 உந்துருளிகளும் உள்ளடங்கும். தவிர, இன்றைய குதிரைப்படை அணிவகுப்பில் 241 குதிரைகளில் வீரர்கள் அணிவகுக்கின்றனர்.
விமான சாகசங்களில் 63 விமானங்கள் கலந்துகொண்டுள்ளன. இன்று தலைநகரில் மிக அழகிய காட்சிகளாக இவை பதிவாக உள்ளன. இவற்றில் Air Force படையைச் சேர்ந்த 49 விமானங்களும், கடற்படையைச் சேர்ந்த 6 விமானங்களும், அமெரிக்காவின் Air Force ஐச் சேர்ந்த 8 விமானங்களும் சாகசம் நிகழ்த்த உள்ளது.