இலங்கையில் மனித உரிமை நிலைமைகள்: ஐ.நா. பிரதிநிதிகள் நேரில் ஆய்வு!

0
458

இலங்கைக்கு ஐந்து நாள் விஜயமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் இன்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே பென் எமர்ஸன் இலங்கைக்கான இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். முன்னதாக பென் எமர்ஸன் தலைமையிலான ஐநா குழுவினர், அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு எட்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்தக் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதித்திருக்கின்றதா, நிலைமை என்ன என்பதை அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரையும் ஐநா விசேட பிரதிநிதி வவுனியாவில் சந்தித்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர்.
விசேடமாக சிறை வாழ்க்கையின் பின்னர், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகள் மனித உரிமை நிலைமைகள் என்பன குறித்து அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர், வவுனியா மேல் நீதிமன்ற மண்டபத்தில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.என்.ஏ.மனாப் மற்றம் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகளையும் பென் எமர்ஸன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிகின்றது.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என கோரி, வவுனியாவில் நீதிமன்றத்திற்கு அண்மையில் ஏ9 வீதியில் 139 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஐநா விசேட பிரதிநிதி பென் எமர்ஸன் தலைமையிலான குழுவினரைச் சந்திப்பதற்கு முயற்சித்த போதிலும். அது கைகூடவில்லை.

தாங்கள் போராட்டம் நடத்தி வருகின்ற இடத்தைக் கடந்து வவுனியா மேல் நீதிமன்றத்தில் இருந்து ஏ9 வீதி வழியாகச் சென்ற ஐ.நா பிரதிநிதி பயணம் செய்த வாகனத்தை வழிமறித்த போது, அவர் வாகனத்தில் இருந்து இறங்கி, அவர்களைச் சந்தித்து உரையாடுவதற்கு நேரமில்லை எனக் கூறிவிட்டுச் சென்றதாக போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும் பென் எமர்ஸன் தமது இலங்கை விஜயத்தின் இறுதியில் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(BBC tamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here