வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வரை துன்னாலை கலிகைச் சந்திப் பிரதேசத்தில் நிலவிய கொந்தளிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை காலை அடங்கியதுடன் பூரண அமைதி நிலவியது.
மணல்காடு பகுதியில் இருந்து மணல் ஏற்றி வந்த லொறி மீது குடத்தனை 6 ஆம் கட்டையடியில் வைத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் துன்னாலை கலிகைச் சந்தி முள்ளிச் சந்திக்கு இடைப்பட்ட பகுதியைச் சேர்ந்த யோகராசா தினேஷ் (வயது 24) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
இச் சம்பவத்தையடுத்து கலிகைச் சந்திக்கும் முள்ளிச்சந்திக்கும் இடையில் வேண்டத்தகாத வன்செயல்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக பஸ் வண்டிகள் மீது கல் வீச்சு, வீதியின் மத்தியில் டயர் எரிப்பு, சோதனைச் சாவடி தீக்கிரை போன்ற பல சம்வங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் பெரும் பதற்றமான நிலை இப்பகுதியில் நிலவிவந்தது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் குறித்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. சடலம் நல்லடக்கம் செய்யப்படும்போது அமைதி காக்கப்படவேண்டுமென பருத்தித்துறை நீதிவான் அறிவித்திருந்தார். அதற்கமைய பூதவுடல் நல்லடக்கத்திற்காக நேற்று நண்பகல் துன்னாலை வேருண்டை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் வேளையில் அமைதி பேணப்பட்டது. எனினும் அதிரடிப் படையினர் அப்பகுதியையும் அண்டிய பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதேநேரம் கலிகைச் சந்திக்கும் முள்ளிச் சந்திக்கும் இடையில் உருவான கொந்தளிப்பு நிலையால் அப்பாதை ஊடாக கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் வெ ளிமாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபட்ட பஸ் வண்டிகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமையினால். அப்பாதை ஊடான சகல இ.போ.ச. பஸ் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும் ஒருசில அத்தியாவசிய சேவைகள் மட்டும் நெல்லியடி, புத்தூர், மீசாலை ஏ 9 ஊடாக இடம்பெற்றிருந்தன.
நேற்று முதல் அமைதி திரும்பியதையடுத்து வழமைபோல குறித்த பஸ் சேவைகள் அப்பாதையூடாக சேவையாற்றத் தொடங்கியுள்ளன.
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியை ஊர்வலம் நேற்று நண்பகல் அமைதியாக இடம்பெற்றதுடன் சடலம் வேருண்டை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நெல்லியடி, துன்னாலைப் பகுதிகளில் அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இறுதிச் சடங்கில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.