யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரில் எண்ணெய்கழிவு கலந்து நீர் மாசடைந்துள்ள நிலையில் எமது அன்றாட பாவனைக்கான குடிநீர் மற்றும் விவசாய உற்பத்திக்கு வேண்டிய நீர் என்பன நஞ்சாகி வருவது இன்று பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற அமைதி வழி போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் எம்மாலான ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம்.
அத்தோடு இப்பிரச்சனைக்கான உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பாக எமது பல்கலைக்கழக மருத்துவ, விஞ்ஞான, விவசாய மற்றும் புவியியல் துறைசார் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் எம்மாலான உதவிகளையும் வழங்கிவருகிறோம்.
குறித்த பிரச்சனை சம்மந்தப்பட்ட தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதும் இதுவரை முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.உடனடித்தீர்வாக நீர்த்தாங்கிகள் மூலம் மக்களுக்கான குடிநீரை வழங்க அரசு நடவடிக்கை எடுத்த போதிலும் கழிவு எண்ணெயின் தாக்கம் பல்வேறு பிரதேசங்களுக்கும் பரவிவருவதால் இது பாரிய பிரச்சனையாக மாறிவருகிறது.
இந்நிலையில் இப் பிரச்சனை தொடர்பாக நிரந்தர தீர்வு கிடைக்க தொடர்ந்தும் குரல்கொடுக்கும் முகமாக பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேச மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கி இன்று சுன்னாகம் பகுதியில் துாய நிருக்கான மக்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இதில் எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஓர் அங்கத்துவமாக இணைக்கப்பட்டுள்ளதோடு எமது பூரண ஆதரவையும் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளோம்.
இந்தப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தோடு பல்கலைக்கழக மாணவர்களாகிய நாமும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.
தூய நீருக்காக ஒயாது குரல் கொடுப்போம்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்