வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிவந்த ஹண்டர் வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
இச்சம்ப வத்தையடுத்து பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கு மிடையில் பெரும் முறுகல்நிலை ஏற்பட்டதையடுத்து பெருமளவு பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு அதனை ஏற்றிவந்த ஹண்டர் வாகத்தை மதிய வேளையில் ஆறாம் கட்டைச் சந்தி எனுமிடத்தில் பருத்தித்துறை பொலிஸார் மறிந்துள்ளனர்.
எனினும் அதனைப் பொருட்படுத்தாது வரணி வீதிவழியாக தப்பிச் சென்ற ஹண்டர் வாகனத்தின் மீது பருத்தித்துறை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படு கின்றது. இதில் துன்னாலை கிழக்கு வேம்படி யைச் சேர்ந்த யோகராசா தினேஸ் (வயது 25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபகராக பலியானார்.
இதன்பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தை அறிந்து வைத்தியசாலை க்குச் சென்ற உயிரிழந்த இளைஞனின் உற வினர்கள் அங்கிருந்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொறுப்பதிகாரி சமாளிக்க முற்பட்ட போதிலும் அவர்களின் உறவினர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் வண்டி மீது சரமாரியான தாக்கு தலைத் தொடுத்தனர்.
இதனால் பொலிஸ் ஜீப் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்தன. இதனையடுத்து பொலிஸார் ஜீப் வண்டியினையும் எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையம் சென்றனர். தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தின் வாயில் கதவு மூடப்பட்டு பெரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சட்டவிரோத மணல் ஏற்றி வந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் பலியானதையடுத்து பொலிஸ் நிலையம் மீது அப் பகுதி மக்கள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என்ற அச்சத்தில் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இருந்து பொலிஸார் வர வழைக்கப்பட்டு ஆயுதப் தாங்கிய வண்ணம் வாயில் தகவுகளைப் பூட்டிவிட்டு நின்றனர்.
இப் பாதுகாப்பிற்கு மேலதிகமாக விசேட அதிரடிப் படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர். பொலிஸ் நிலையத்தில் யாரும் உள் நுழையாதவாறு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் ஆவேசமடைந்த மக்கள் துன்னாலை புளியான் கியான் சந்தியில் இருந்த பொலிஸ் காவலரணை அடித்து நொறுக்கியதுடன் அதற்கு தீ வைத்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.