வரலாற்றில் என்றுமில்லாதவாறு நாடு டெங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்நிலைமை நீடித்தால் ஓரிரு வருடங்களில் நாடு பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரும் எனவும் அரச மருத்துவர் சங்கம் தெரிவித்தது.
அரசாங்கம் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு டெங்கு ஒழிப்பிற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் வலியுறுத்துகிறது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஆறு மாத காலத்தில் டெங்கு நோயாளர்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதுடன்நூற்றுக்கணக்கானோர் டெங்கு நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்த விடயத்தில் ஜனாதிபதி கூடுதல் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் டெங்கு ஒழிப்புக்கு காத்திரமான ஒரு பொறிமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார்.
ஏற்கனவே இதுதொடர்பில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைவரையும் அழைத்து மருத்துவர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அதனை அடிப்படையாக வைத்து 8 விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச மருத்துவர் சங்க தலைமையகத்தில் நேற்று(06) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கையில் 2012 ஆம் ஆண்டிலேயே டெங்கு அதிகரித்தது. அப்போது 33,000 பேர் டெங்கு நோயாளர்களாகக் காணப்பட்டதுடன் 300 பேர் இதனால் மரணமடைந்தனர்.
எனினும் தற்போது 88,000 பேர் டெங்கு நோய்க்குள்ளாகியுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அரசாங்கம் 225 பேர் தான் பலியாகியுள்ளனர் என்று கூறுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதுடன் அதில் நூற்றுக்கணக்கானோர் இறந்திருப்பர் என சந்தேகம் எழுகிறது. எனினும் அரசாங்கம் தவறான எண்ணிக்கையையே நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த வருடத்தில் 10,000 பேருக்கு 16 என்ற ரீதியிலேயே டெங்கு மரணம் இடம்பெற்றது. எனினும் இந்த வருடத்தில் 10,000 பேருக்கு 32 பேர் என்ற ரீதியில் மரணங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலை எதிர்காலத்தில் மேலும் மோசமாகலாம் என்பதால் சுகாதார அமைச்சும், சுகாதார அமைச்சரும், ஜனாதிபதியும் இது தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணமிது.
நாட்டில் இயற்கை அனர்த்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் வேறு பல முக்கியமான சந்தர்ப்பத்திலும் அரச மருத்துவர் சங்கம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்துள்ளது. இப்போதும் டெங்கு தொடர்பில் அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பாதிப்பிலிருந்து மீள்வதற்கு சங்கம் தேவையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.
டெங்கு ஒழிப்பில் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணி பிரதானமான அமைப்பாக இருந்து செயற்படுகிறது. அச்செயலணியோடு இணைந்து சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவும் செயற்படுவதுடன், அரச மருத்துவர் சங்கமும் அதனோடு இணைந்து செயற்பட்டால் இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இயற்கை முறைப்படி இந்த நோயை தீர்க்கலாம் என்று சுகாதார அமைச்சு எதிர்பார்ப்பது தவறு. இனியும் டெங்கு நோய் அதிகரிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தற்போதுள்ள நிலைமையை நோக்கும் போது இவ்வருட முடிவில் நாட்டில் ஒன்றரை இலட்சம் பேர் டெங்கு நோயினால் பாதிப்புறலாம். கொழும்பு, கண்டி, பதுளை உட்பட டெங்கு மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.