கடந்த பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட விடுதலைச்சுடர் பிரித்தானியாவின் பல பாகங்களில் தனது கவனஈர்ப்புப் பொராட்டங்களை நடாத்தி 14.02.2015 மாலை பிரான்சை வந்தடைந்தது. அதனைக் கையேற்ற தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்இளையோர் அமைப்பு தமிழீழ மக்கள் பிரதிநிதிகளால் விடுதலைச்சுடர் பாரிசு மத்திய பகுதிக்கு கொண்டு சென்றிருந்தனர்.
15.02.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 அணிக்கு பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான செவரோன் நகரத்தில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபிக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திரு அலெக்சு அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளருமாகிய திரு. சுரேஸ் அவர்களால் விடுதலைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
இச்சுடரினை தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினர் திரு. தினேசு அவர்கள் கையேற்றிருந்தார். தொடர்ந்து விடுதலைச்சுடர் செயற்பாட்டினையும், அவை கொண்டு செல்லப்போகும் இடங்கள் பற்றியும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் உரையாற்றியதோடு விடுதலைச்சுடர் உரிமை முழக்கத்தையும் வாசித்திருந்தார். பிரெஞ்சு மொழியிலும் செவரோன் தமிழ்ச்சங்கத்தின் செல்வி. நிந்து வாசித்தளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து விடுதலைச்சுடரினை எதிர்வரும் 23ம் திகதி வரை பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டத்தையும், பரப்புரையையும் செய்ய பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ் இளையோர் அமைப்பினர் சுடரினைப் பெற்றுக்கொண்டனர். செய்யப்பட்டவந்து கலந்து கொண்ட தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற மக்களின் உறுதிமொழியோடு விடுதலைச்சுடர் பாரிசின் முக்கிய பகுதிகளில் ஒன்றான Trocadero சுதந்திர சதுக்கத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.