போராட்டத்தை மழுங்கடிக்கவே காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் பற்றிப்பேசப்படுவதாகவும் எத்தனை அலுவலகங்களை அமைத்தாலும்,எமது பிள்ளைகள் தொடர்பான சரியான தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமெனவும் வவுனியா மாவட்ட போராட்டக் குழுத் தலைவி தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப்போராட்டம் நேற்றுடன் (05) 132 வது நாட்களை எட்டியுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:
அரசாங்கத்திடம் எங்கள் பிள்ளைகள் தொடர்பான ஆதாரங்களை கொடுத்து கடந்த 132 நாட்களாக தொடர்ச்சியாக இரவு பகல் என்று பாராமல் நாங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். இந்நிலையில் 2015 ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக அறிவித்த சர்வதேசம், அதற்கு இலங்கை அனுமதி அளிக்கவில்லை என்று காரணம் கூறி இன்று வரை தட்டிக்களித்துவந்துள்ளது. ஜூலை மாதத்திற்கு பிறகு காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் அலுவலகம் அமைத்து எத்தனை வருடங்களுக்கு பிறகு எமது பிள்ளைகளை விடுதலை செய்யப்போகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பல போராட்டங்கள் ஊடாகவும் உறுதியான ஆதாரங்கள் ஊடாகவும் எங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை மழுங்கடிக்கவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் அமைப்பது தொடர்பான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந. நிலையில் எத்தனை அலுவலகங்களை அமைத்தாலும் எத்தனை வருடங்கள் ஆனாலும் எமது போராட்டத்தை கைவிட முடியாது. எங்கள் பிள்ளைகள் தொடர்பான சரியான தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். வவுனியாவில் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தாய்மார்களை சந்தித்து கலந்துரையாடிய ஐக்கியதேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட முன்னாள் வேட்பாளர் எ.எஸ்.எம்.தாயுன் கருத்து தெரிவிக்கையில்:
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு அரசாங்கம் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்காமல் இருப்பது கவலையளிக்கிறது.