கரவெட்டி இராஜ கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் பெய்த கன மழையால் 25 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஜே/ 363 கிராமசேவகர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நேற்று முன்தினம் பெய்த மழையினால் பெருமளவு பாதிப்பை எதிர் நோக்கியுள்ளது.
இந்நிலையில் கர வெட்டி இராஜ கிராமத்தில் நேற்று முன்தினம் தொடக்கம் பெய்த கன மழையினால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.
இதனால் நேற்று முன் தினம் 10 குடும்பங்களும் நேற்றைய தினம் 15 குடும்பங்களுமாக மொத் தம் 25 குடும்பங்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி இராஜ கிராம சனசமூக நிலையத்தில் தங்கியிருப்பதாக கரவெட்டி இராஜ கிராம கிராமசேவகர் தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு கரவெட்டி பிரதேச செயலகத்தினால் சமைத்த உணவுப் பொருட்களும் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த கிராமம் தாழ் நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் அதிகளவான வெள்ளம் தேங்கி நிற்பதனால் ஏனைய குடும்பங்களும் குறித்த இடத்தை விட்டு வெளி யேற வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கிராமத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலர், உட்பட பலர் விஜயம் செய்து கிராமத்தின் பரிதாப நிலையை பார்வையிட்டு சிறு உதவிகளும் செய்து வருகின்றனர்.
இருந்த போதிலும் மக்கள் தாம் ஒவ்வொரு தடவையும் இவ்வாறான பரிதாப நிலையை எதிர்நோக்குகின்ற போதிலும் இதுவரையிலும் எந்த தரப்பினரும் தமக்கு உரிய தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவில்லையயன விசனம் தெரி வித்துள்ளனர்.