தமிழகம் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பனை எதிர்த்து நடக்கும் நெடுவாசல் போராட்டம் குறித்து கீரமங்கலத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 75 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்த 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று கீரமங்கலத்தில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த இந்திய மத்திய அரசு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனை எதிர்த்து நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள் 2ம் கட்டமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 75 நாட்களாக இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது. ஆனால் இந்திய மத்திய அரசோ தமிழக அரசோ இதனை கண்டு கொள்ளவே இல்லை.
இந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து ஒப்பந்தம் பெற்றுள்ள ஜெம் நிறுவனம் விவசாயிகளின் நிலம் குத்தகை ஒப்பந்தத்தை தங்கள் நிறுவன பெயருக்கு மாற்றித் தரக் கோரியுள்ளது. இதனால் நெடுவாசல் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நெடுவாசல் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் அடுத்த கட்ட வேலைகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. தங்கள் போராட்டத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளாத இரண்டு அரசுகளின் கவனத்தை ஈர்க்க 75 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தை பெரிய அளவில் மாற்ற கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஆலோசனை நடத்த நெடுவாசலை சுற்றியுள்ள சுமார் 70 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று கீரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதன் முடிவில் போராட்டத்தை எந்த வகையில் தீவிரப்படுத்தி மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பது என்பது அறிவிக்கப்படும்.