வடமராட்சியில் அத்துமீறிய தென்னிலங்கை மீனவர்கள் 9 பேர் மடக்கிப் பிடிப்பு!

0
219

முல்லைத்தீவில் கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தினை வைத்துக் கொண்டு வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கடல் அட்டை பிடித்ததுடன் உள்ஊர் மீனவர்களின் வலைகளை வெட்டிச் சேதப்படுத்திய மூன்று படகுகளில் வந்த ஒன்பது பேரினை அப்பகுதி மக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
வடமராட்சிக் கிழக்கு கடற்பரப்பில் உள்ஊர் மீனவர்களின் வலைகள் தென்னிலங்கை மீனவர்களின் படகுகளினால் அறுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை பத்துப்படகுகளில் வந்த தென்னிலங்கை மீனவர்கள் கரையை அண்மித்து வந்து கடல் அட்டை பிடித்ததுடன் மீனவர்களின் வலைகளையும் அறுத்துள்ளனர்.
இதனையடுத்து கொதிப்படைந்த நாகர்கோவில் மீனவர்கள் படகுகளில் சென்று மூன்று படகுகளையும் மடக்கி முற்றுகையிட்டு அதில் இருந்து ஒன்பது மீனவர்களையும் கரைக்குக் கொண்டு வந்தனர்.
சம்பவம் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த மருதங்கேணிப் பிரதேச செயலர் கே.கனகேஸ்வரன் மீனவர்களுடன் கலந்துரையாடி அவர்கள் ஒன்பது மீனவர்களையும் மூன்று படகுகளையும் பருத்தித்துறைப் காவல் துறையிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தார்.
பின்னர் அங்கு சென்ற காவல்துறை ஒன்பது மீனவர்களையும் பொறுப்பெடுத்ததுடன் அவர்களது படகுகளையும் அதற்குள் இருந்த கடல் அட்டைகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ள நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் ஒருவர் முல்லைத்தீவினையும் இருவர் கற்பிட்டியினையும் மற்றைய ஆறுபேரும் மன்னாரின் வங்காலை பள்ளிக்குடா பகுதியைச் சேர்ந்தவர் கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here