டெலிபோன் எக்சேஞ்ச் மோசடி வழக்கில் தனது உதவியாளர்களை சி.பி.ஐ. கைது செய்ததும் தி.மு.க. தலைவர் கருணாநிதியைச் சந்தித்துவிட்டு கோபாலபுரத்தில் தயாநிதிமாறன் மீடியாக்களுக்கு பேட்டியளித்தார் அதைத் தொடர்ந்து தி.மு.க பொருளார் ஸ்டாலினும் மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாகத் திருவாய் மலர இது உடன் பிறப்புகளிடம் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
இந்தக் குமுறல் தி.மு.க சமூக வலைத்தளத்திலேயே வெளிப்பட்டது.
பேஸ்புக் தி.மு.க பக்கத்தில் கற்கத்தி ரமேஷ்குமார் நன்னிலம் தி.மு.க என்ற ஐ.டியில் இருந்து, சொல்ல வேண்டியதை யாரோ சொல்கிறார்கள். ஞாநிசங்கரன் என்ற தலைப்பில் போடப்பட்ட பதிவில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மீண்டும் புத்துயிர் பெறும் வாய்ப்பை ஸ்டாலினே கெடுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். பெண் வாரிசு மற்றும் மாறனிடம் இருந்து தன்னையும் கட்சியையும் விலக்கி வைத்துக் கொண்டு கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிதான் அவருக்கு பயன்தரும் மாறாக மாறன்களுக்கு சார்பாக பேசத் தொடங்கியிருப்பது பின்னடைவையே ஏற்படுத்தும். தி.மு.கவை இப்போது பலவீனப்படுத்துவது அதன் எதிரிகளே அல்ல. அதற்குள்ளேயே இருக்கும் ஊழல் பேர்வழிகள்தான் என்று கொதித்திருந்தார்.
பேஸ்புக் தி.மு.க இளைஞரணி பக்கத்தில் சித்திரா நடராஜன் என்ற ஐடியில் இருந்து போடப்பட்ட பதிவில் இந்தக் கேடி சகோதரர்கள் தி.மு.க மூலம் பெரும் வளர்ச்சி அடைந்து தி.மு.கவிற்குள் இருந்துகொண்டே தி.மு.கவை அழிக்க வந்த மோசமான வெள்ளைக் கருநாக விஷப்பாம்புகள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தப் பதிவு அதிக கமென்ட்களையும் லைக்ஸ்களையும் அள்ளியது.
பேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு ஆதரவாகச் செயல்படும் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் ஸ்டாலின் நிலைப்பாட்டை ஆதரித்துப் போட்ட பதிவில். பெண் வாரிசை சாடியிருந்தார். இதனால் பெண் வாரிசு ஆதரவாளர்கள் சிலர் கொதித்துப்போய் ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்துப் பதிய பேஸ்புக் தளம் போர்க்களமானது.
அபிஅப்பா என்கிற தொல்காப்பியன் பதிவில் பணம் கோடி கோடியாகக் கொட்டிகிடந்தாலும் அரசியல் என்பதுதான் பலம் என்பதை மாறன் சகோதரர்கள் உணர்ந்த நாள் நேற்று. சேனல்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லக்கூடிய தெம்பும் திராணியும் அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு இருந்தது.
இதோ தயாநிதிமாறனும் ஊடகத்திடம் பேசிவிட்டார் இந்தத் தைரியம் ஏன் பெண் வாரிசுக்கு இல்லை என்று பதிவிட்டார்.
இதற்கு மனக்குமுறல் என்ற ஐ.டியில் இருந்து ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்து கமென்ட் போடப்பட்டது. உங்களுக்கு அண்ணன் ஒரு கோவில் என்றால் எங்களுக்கு தங்கை ஒரு தெய்வமன்றோ என்று பஞ்ச் வைத்து முடிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கமென்டுகளுக்குப் பதில் சொல்லும் விதமாகத் தனியாகப் பதிவு போட்டிருந்த கொக்கரக்கோ செளம்யன் ஜெயலலிதாவை விமர்சித்து திருவரங்க வெற்றிக்கு வித்திட வேண்டிய தி.மு.கவினர் பெண் வாரிசுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெட்லி ஜெயலலிதா சந்திப்பைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்க வேண்டிய தி.மு.கவினர் தற்போது தயாநிதிக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று மொத்தமாகப் போட்டு உடைத்தார்.
ராஜாகுப்பம் முருகானந்தம் தன் பதிவில் முதலில் தி.மு.க தலைவரைக் கலைஞர் என்று கூறிய சன் டி.வியும் தினகரனும் பிறகு நடுநிலை என்ற போர்வையில் நம் உயிருக்கு உயிரான தலைவரையும் நம் தளபதியையும் பெயர் சொல்லி அழைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2006 , 2011,- 2014ஆம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரங்களில் சன். டி.வியின் பங்கு என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும் தி.மு.கவின் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் கவலைப்படாத இவர்களுக்கு இன்று ஒரு பிரச்சினை என்றதும் தி.மு.கவையும் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று மாறன் சகோதர்களுக்கு டோஸ் விட்டிருக்கிறார்.
தயாநிதி பேட்டியையும் அவருக்கு ஆதரவாக ஸ்டாலின் பேட்டி கொடுத்ததையும் தி.மு.கவினரே கிண்டல் செய்து பதிவு போடும்போது மற்றப் பதிவர்கள் சும்மா இருப்பார்களா என்ன?
எழுத்தாளர் சுப்ரஜா ஸ்ரீதரன் தன் பக்கத்தில் எனக்கும் சன் டிவிக்கும் தொடர்பு இல்லை என்று சொன்ன தயாநிதி மாறன் வீட்டில் இருந்த எக்ஸ்சேஞ்ச் படம் என்று ஒரு புகைப்படத்தை பதிவேற்றியவர் தொடர்ந்து எனக்கும் சன் டிவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை தயாநிதிமாறன் என்ற வாசகத்துக்குக் கீழே அப்படின்னு தாத்தா சொல்லச் சொன்னாரு சொல்லிவிட்டேன் நீங்க இதை நம்பித்தான் ஆகணும் என்று பதிவிட்டிருந்தார்.
ஸ்ரீனிவாசன் நாகராஜன் என்ற ஐடியில் போடப்பட்ட ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு பாலம் அமைத்தான் ராமன் போட்கிளப்பில் இருந்து தேனாம்பேட்டைக்கு அண்டர்கிரவுண்டில் கேபிள் அமைத்தான் மாறன் என்ற பதிவு அதிகமாக ஷேர் செய்யப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.எஸ். சதி என்ற தயாநிதி மாறன் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆனந்த் எம்.பி.ஏ. என்ற ஐடியில் தயாநிதி மாறனின் பேட்டியை உல்டா செய்து கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் தயாநிதிமாறனையும் அவருக்கு ஆதரவு கொடுத்த தி.மு.கவையும் சமூக வலைத்தளத்தில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள்.