பிரான்சு பாரிசில் தமிழ்தேசிய ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கடுமையான எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (19.06.2017) திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் பிரான்சு பாரிஸ் செந்தனிப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்தில் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஐஎல்சி வானொலியின் ஐரோப்பிய செய்தியாளரும் இணைப்பாளருமான சின்னத்துரை ஆனந்த் என்ற ஊடகவியலாளரே இவ்வாறு தாக்குதலக்கு உள்ளாகியவராவார்.
சம்பவதினம் இரவு வீடுதிரும்பிக்கொண்டிருந்த ஆனந்த் 13 ஆம் இலக்க நிலக்கீழ்த் தொடருந்தில் இருந்து வெளியேறி வீடுநோக்கி நடந்துசென்றுகொண்டிருந்தபோது, செந்தனிப் பகுதியில் அவரது வீட்டுக்கு அண்மையில் மூவர் வழிமறித்து, பெயர் சொல்லி அழைத்து நீ மீண்டும் எழுச்சிகொள்கிறாய். ‘உயிர் மீது ஆசை இருந்தால் எல்லாவற்றையும் விட்டு விட்டு பாரிசில் இருந்து உடனடியாக வெளியேறு…” என கடுமையாகத் தமிழ் மொழியில் எச்சரித்துள்ளனர். ஏன் எதற்கு என்று ஆனந்த் கேட்டபோது, மூவரில் இருவர் அவரது முகம், கழுத்து போன்றவற்றில் தாக்கி, வீழ்த்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் ஆனந்த் முகம், கழுத்து, கை போன்ற பகுதிகளில் அடிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அத்துடன் உளரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரான்சு காவல்துறையிலும் முறைப்பாடுசெய்துள்ளதோடு, மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.
பிரான்சு காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.