வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று தமிழரசுக் கட்சியால் மீளப் பெறப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கடந்த 14.06. 2017 அன்று இரவோடு இரவாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தால் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 15ஆம் திகதி முதலமைச்சருக்கான தமது ஆதரவைத் தெரிவித்து இளைஞர்கள் பேரணியாக திரண்டனர். தொடர்ந்து மறுநாள் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூரண பணி தவிர்ப்பு கடை அடைப்புக்கும் ஆதரவுப் பேரணிக்குமாக தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்தது.
மிகக் குறுகிய நேரத்தில் விடுக்கப்பட்ட இவ் அழைப்பை ஏற்று வடக்கு மாகாணம் முழுமையும் முடங்கியதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு பேரணியாக முதலமைச்சரின் இல்லத்திர்க்குச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
அதேவேளை வடக்கு மாகாணம் முழுவதும் ஆதரவுப் போராட்டங்கள் நடந்தன. இதனையடுத்து தமிழரசுக் கட்சி மிகமோசமான நெருக்கடிக்கு ஆளாகியது.
இந்நிலையில் சமாதான முயற்சிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எடுத்த முயற்சிக்கு மேலாக,நேற்றையதினம் மதத் தலைவர்கள் சமா தான முயற்சியில் களமிறங்கினர்.
நல்லை ஆதீன குரு முதல்வர் வணக்கத்துக்குரிய சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் யாழ்.மறைமாவட்ட ஆயர் மேதகு ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் மேற்கொண்ட சமாதான முயற்சியையடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தர், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் ஓர் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப் பெறுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் அறிவித்தார்.
இதேவேளை சில நிபந்தனைகளுடன் அமைச்சர்கள் பா.சத்தியலிங்கம், ப.டெனீஸ்வரன் ஆகியோர் தமது அமைச்சுப் பொறுப்புக்களை கவனிப்பர் எனவும் அவர்கள் மீதான விசாரணை தொடரப்படும் எனவும் இணங்கிக் கொள்ளப்பட்டது. முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டது என அறிவிக்கப்பட்டதும் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
Home
ஈழச்செய்திகள் மக்கள் எழுச்சிக்கு பணிந்தது கூட்டமைப்பு ! நம்பிக்கை இல்லா பிரேரணையை மீளப் பெற்றது!