இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று மைத்திரிபால சிறிசேன நாளை 15 ஆம் திகதி இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று இவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் இலங்கை – இந்திய நல்லுறவில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட முக்கியஸ்தர்களையும் சந்திக்கவுள்ளார்.
அத்தோடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வார்.
தமது விஜயத்தின் போது புகழ்பெற்ற பெளத்த வழிபாட்டுத் தலமான புத்த காயாவைத் தரிசிக்கும் ஜனாதிபதி அதனையடுத்து திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தேவஸ்தானத்துக்கும் சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.