பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படுவதாயின் உரிய காணி உரிமையாளர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதனை விடுத்து காணிகளைப் பிரித்து மாதிரிக் கிராமம் அமைப்பதோ அல்லது மக்களுக்குப் பகிர்ந்த ளிப்பதோ பிழையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி தெரிவித்தார்.
முதற்கட்டமாக 220 ஏக்கர் காணிகளை 20 பேர்ச் காணித் துண்டுகளாகப் பிரித்து மக்களுக்கு வழங்கப்படவிருப்பதாக புதிய அரசாங்கம் கூறியுள்ளது. இவ்வாறு செய்வதானது கடந்த அரசாங்கம் செய்த பிழையையே இந்த அரசாங்கமும் செய்வதாக அமை யும் என அவர் தினகரனுக்குத் தெரி வித்தார்.
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பொதுமக்களின் காணிகள் உள்ளன. இவற்றில் 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவிருப்பதாகவும், முதற்கட்டமாக 220 ஏக்கர் காணிகளை 20 பேர்ச் காணித்துண்டுகளாகப் பிரித்து 1022 குடும்பங்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் புதிய அரசாங்கம் கூறியுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படவுள்ள காணிகள் விவசாயக் காணிகள் என்பதால் அந்தந்தக் காணி உரிமையாளர்களிடமே வழங்கப்பட வேண்டும். அதனைவிடுத்து புதியவர்களுக்கு காணிகளை வழங்குவதை பிழையான விடயமாகவே நாம்பார்க்கின்றோம்.
இவ்வாறான முயற்சியொன்றையே கடந்த அரசாங்கமும் மேற்கொண்டது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கமும் அதே பிழையான செயற்பாட்டையே செய்ய முயற்சிக்கிறது. இவ்வாறானதொரு தீர்மானமொன்றுக்கு வருவதற்கு முன்னர் வடபகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களை அழைத்து அரசாங்கம் கலந்துரையாடியிருக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் கடந்த அரசாங்கம் செய்த ஆதே பிழையை புதிய அரசாங்கமும் செய்யுமாயின் அது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே அமையும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகள் மக்களிடம் கையளிக்கப் படுவதாயின் அந்தந்தக் காணிகள் அந்தந்தக் காணிகளின் உரிமையாளர்களிடம் மாத்திரமே கையளிக்கப்பட வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச் சந்திரன் மேலும் தெரிவித்தார்.