முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை 100 ஆவது நாளை எட்டியுள்ள போதும், தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவத்திடம்ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீர்வு கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டத்தை தொடரப் போவதாக தெரிவித்து. கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி புதன்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தின் முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து முன் னெடுத்து வருகின்றனர். இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த உறவுகள் கருத்துத் தெரிவிக்கையில், எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 100 ஆவது நாளை எட்டியுள்ள போதும், தீர்வு எதுவும் கிடைக்காத நிலை காணப்படுகின்றது.
அண்மையில் ஜனாதிபதியை நாங்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய போது, எமது வலிந்து காணாமல் ஆக்கப்ப ட்ட பிள்ளைகள் தொடர்பில் முப்படையிருக்கும் அறிவித்து தகவல் சேகரித்து முடிவு களை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, இதற்கு மதிப்பளித்து இன்று 100 ஆவது நாளை முன்னிட்டு எங்களால் முன்னெடுக்கப்பட இருந்த விசேட போராட்ட விஸ்தரிப்புக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், எமது சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம் என தெரி வித்துள்ளனர்.