தமிழரசுக் கட்சியின் செயலைக் கண்டித்து நாளை யாழில் பூரண கடையடைப்பு!

0
344

தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக நாளை யாழில் பூரண கடையடைப்பு பாடசாலைகள் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக யாழில் விசேட பத்திரிகைகள் கூட இன்று மாலை வெளியாகியுள்ளன.

தமிழரசுக் கட்சியின் செயலைக் கண்டித்து பூரண கடையடைப்பு, மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் பொது அமைப்புக்கள் இதற்கான முன்னெடுப்பைச் செய்வதாகவும் தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவி நீக்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவால் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி 17 உறுப்பினர்கள் கையயழுத்திட்ட கடிதம் நேற்று இரவு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் கையளிக்கப்பட்டது.

இச்செய்தி பரவியதும் தமிழ் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். இதேவேளை தமிழரசுக் கட்சியின் இக் கொடுஞ்செயல் கண்டு பொது அமைப்புக்கள் கோபாவேசம் அடைந்துள்ளதுடன் அரசாங்கத்துடன் சேர்ந்து இச்சதித் திட்டத்தை தமிழரசுக் கட்சி அரங்கேற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன.

தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக மதிக்கப்படும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் ஆளுநர் றெஜினோல்ட் கூரே மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இது விடயத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட்டால், வடக்கு கிழக்கு மாகாணம் கொந்தளிக்கும் – ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள், கடையடைப்புக்கள், வீதி மறிப்புக்கள் என எங்கும் அல்லோலகல்லோலம் ஏற்படும்.

தமிழரசுக் கட்சியே அரசாங்கத்துடன் சேர்ந்து வடக்கின் முதலமைச்சருக்கு சதி செய்யாதே! தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்காதே! என்ற கோசங்களால் தமிழர் தாயகம் ஸ்தம்பிதமடையும் என அரசியல் அவதானிகள் கருத்துரைத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here