வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான அத்தனை முயற்சியையும் தமிழரசுக் கட்சி செய்துள்ளதென்ற செய்தி தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்குவதற்கு யார் முயற்சி செய்தாலும் அவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர் என்பதே உண்மை.
அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டைக் கொண்டு வந்து விசாரணைக் குழுவை அமைக்குமாறு கோரிக்கை விட்டவர்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்.
இதனையடுத்தே முதலமைச்சர் விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவை நியமித்தார்.
விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவந்த போது என்ன முடிவாயினும் எடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விட்டு விடுவதாக மாவை சேனாதிராசா தலைமையில் கூடிய தமிழரசுக் கட்சி முடிவு செய்து அதை முதலமைச்சருக்கு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் முதலமைச்சர் எடுக்கின்ற தீர்மானத்துக்கு கட்டுப்படுவதே நியாயம் உளார் செயல்.
ஆனால் எந்த முடிவாயினும் அதை எடுக்கும் அதிகாரத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விட்டுவிடுவதாகக் கூறிவிட்டு பின்னர் அவர் எடுத்த முடிவுக்கு எதிராக முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீக்குவது என்ற தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – அதில் உடன்பட்டு கையெழுத்து வைத்த உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்துள்ளனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்கம் செய்வதென்ற சதித்திட்டம் ஏற்கெனவே தமிழரசுக் கட்சியால் தீர்மானிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது அங்கு கூடியிருந்த தாய்மார், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் காலைப்பிடித்து ஐயா! சம்பந்தரை வெளியே போகச் சொல்லுங்கள் என்று அழுதபோது,
தமிழரசுக் கட்சியின் தலைமை முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்க வேண்டும் என்ற முடிவை உறுதியாக்கியது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்க தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு தமிழரசுக் கட்சிக்கே நாசத்தைக் கொடுக்கும்.
தங்களின் நம்பிக்கைக்குரிய தலைவனை பதவி நீக்குவது கண்டு தமிழ் மக்கள் கொதித் தெழுவர்.
வடக்கு கிழக்கு முழுவதும் ஸ்தம்பிதம் அடையும். புலம்பெயர் தமிழர்கள் சினம் கொண்டெழுவர்.
ஓ! தமிழரசுக் கட்சியே உன் கொடுமைக்கு – நீ தமிழர்களுக்குச் செய்யும் துரோகத்துக்கு முடிவே இல்லையா என்று கேட்கும்.
அப்போதுதான் தமிழரசுக் கட்சி தான் செய்த அநியாயத்துக்காக கவலை கொள்ளும்.
(valampuri)