மகளை தனியார் வகுப்பில் இருந்து வீட்டிற்கு அழைப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த தந்தையை பின்னால் வந்த இருசக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 5.30 மணியளவில் ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இதில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு சுன்னாகத்தினைச் சேர்ந்த சின்னாவி சண்முகலிங்கம் (வயது 52) என்பரே உயிரிழந்துள்ளார்.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.