புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் நீதாய விளக்க (ட்ரயல் அட்பார்) விசாரணைகள், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நேற்றைய தினம் காலை 10 மணிக்கு யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பமாகியது.
வழக்கு தொடுநர் தரப்பில் இருந்து வழக்கை நெறிப்படுத்துவதற்காக பிரதி மன்றாதிபதி பி.குமாரரட்ண மற்றும் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஸான் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
முதலாம் எதிரியான பூ.இந்திரகுமார், 2 ஆம் எதிரியான பூ.ஜெயக்குமார், 3ஆம் எதிரியான பூ.தவக்குமார், 4ஆம் எதிரியான ம.சசிதரன், 5ஆம் எதிரியான நி.சந்திரகாந்தன், 6ஆம் எதிரியான சி.துசாந்தன், 7ஆம் எதிரியான ப.குகநாதன், 8ஆம் எதிரியான ஜெ.கோகி லன், 9ஆம் எதிரியான ம.சசிகுமார் ஆகியோர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
5ஆவது எதிரி சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி ஆஜரானார். ஏனைய எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் மன்றில் ஆஜராகவில்லை. தமக்கு சட்டத்தரணிகள் எவரும் ஆஜராவதற்கு தயாராக இல்லை என தெரிவித்த எதிரிகள், தமக்கு அரச தரப்பால் சட்டத்தரணிகளை நியமிக்குமாறு மன்றில் கோரியிருந்தனர். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் தீர்மானத்தினை எடுப்பதற்கு 15 நிமிடங்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில் 4ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகள் சார்பாக அரச தரப்பினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சி.கேதீஸ்வரனும் முதலாம், 2ஆம், 3ஆம் 5ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி ஆ.ரகுபதியும் ஆஜராகியதுடன் 1 தொடக்கம் 9 வரையான எதிரிகளுக்கு மன்றால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி வி.ஜெயந்தன் ஆஜரானர். பாதிக்கப்பட்ட சாட்சிகளின் நலன் கருதி சட்டத்தரணி கே.ரஞ்சித்குமார் ஆஜரானார்.
வழக்கை ஆரம்பித்த பிரதி மன்றாதிபதி, சட்டமா அதிபரால் மேல் நீதிமன்ற பதிவாளருக்கு குறித்த வழக்கு தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை மன்றில் கையளித்திருந்தார். அதாவது வழக்கு தொடர்பான தகவல்கள் அடங்கிய அத்தாட்சிப்பத்திரம், குற்றச்சாட்டு பத்திரம், வழக்குடன் தொடர்புடைய சான்றுப்பொருட்கள், விசாரணை அறிக்கைகள் போன்றவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்பத்திரம் ஒவ்வொரு எதிரிகளுக்கு வழங்கப்பட்டதுடன் ஒவ்வாருவருக்கும் தனித்தனியே குற்றச்சாட்டு பத்திரம் மன்றில் வாசித்து காண்பிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டடியமை, வன்புணர்வு நோக்கத்துக்காக கடத்தியமை, கூட்டாக சேர்ந்து வன்புணர்வு செய்தமை, கூட்டாக சேர்ந்து வன்புணர்வு செய்து கொலை செய்தமை போன்ற பிரதான குற்றங்களும் மேற்குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாக வாசித்து காண்பிக்கப்பட்டது.
இதில் 9ஆம், 4ஆம் எதிரிகளுக்கு எதிராக பிரதான குற்றச்சாட்டாக, வித்தியாவை வன்புணர்வு நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலாம், 2ஆம், 3ஆம், 5ஆம் 6ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த நான்கு பிரதான குற்றச்சாட்டுக்களும் சாட்டப்பட்டுள் ளன, 7ஆம் 8ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உடந்தையா இருந்துள்ளதாக பிரதான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தாம் சுத்தவாளிகள் என 9 எதிரிகளும் மன்றுரை செய்திருந்தனர்.
எதிரிகளுடைய வாக்குமூலங்களில் பெரும்பாலானவை சிங்கள மொழியில் இருப்பதனால் பேசும் மொழி தமிழாக இருக்கும் காரணத்தினால் தமிழில் மொழிபெயர்த்து அவற்றை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு பிரதிமன்றாதிபதிக்கு நீதிபதிகள் பணிப்புரை விடுத்தனர்.
இதனையடுத்து எதிர்வரும் 28,29,30 மற்றும் யூலை மாதம் 3,4,5 ஆம் திகதிகளில் தொடர் விளக்கம் இடம்பெறும் என நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி குறித்த வழக்கின் சாட்சிகளான 1 தொடக்கம் 37 வரையான சாட்சிகளையும் மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இதில் அரச தரப்பு சாட்சியாக மாறிய உ. சுரேஸ்கரன் சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட நிபந்தனைக்குரிய மன்னிப்பில் யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படியால் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
குறித்த எதிரிகள் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் தொடர் விசாரணை இடம்பெறவுள்ள காரணத்தால் அவர்களை சந்தித்து வழக்கு தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு இலகுவாக அவர்களை யாழ் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு எதிரிகள் தரப்பு சட்டத் தரணியால் மன்றில் கோரிக்கை விடுக்கப்ப ட்டது.
அது தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் மேற்குறித்த எதிரிகள் 9 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விழக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டனர்.
யாழ்.மேல் நீதிமன்றில் தற்போதைய மன்றில் இடப்பற்றாக்குறை காணப்படுவதால் இவ்வழக்கின் அடுத்த விசாரணை நட வடிக்கைகள் யாழ்.மேல் நீதிமன்றின் 3ஆம் மாடியில் இடம்பெறும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
Home
ஈழச்செய்திகள் வித்தியா படுகொலை 9 எதிரிகள் மீதும் 41 குற்றச்சாட்டு 28 ஆம் திகதி வரை விழக்கமறியல்...