யாழ். பலாலி விமானப் படை தளத்துக்கு அருகாமையிலுள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் 6,152 ஏக்கரில் 1000 ஏக்கரை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முதற் கட்டமாக வலிகாமம் கிழக்கு பகுதியில் வலலாய் கிராம சேவகர் பிரிவிலுள்ள 220 ஏக்கரை உடனடியாக விடுவிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சரவையின் பதில் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
மைத்திரிபாலவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்த காலத்தின் போது அலரி மாளிகையை சூழவுள்ள பகுதியும்.
ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதியும் அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்டது. இந்தப் பகுதிகளையும் விடுவிக்க நேற்றைய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட தாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் கிழக்கில் பொத்துவில் பாணம பகுதியில் விமானப் படையினரால் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியிருந்த 500 ஏக்கரில் 25 ஏக்கரை விமானப் படையின் தேவைக்காக வழங்குவதுடன் 475 ஏக்கரை விடுவிக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட 11,639 ஏக்கர் காணி ஏற்கனவே கட்டம் கட்டமாக கடந்தகால அரசு விடுவித்திருந்தது. ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசு பதவியேற்று நான்கு வாரங்கள் ஆன நிலையில் உடனடியாக கட்டம் கட்டமாக பலாலியில் 1000 ஏக்கரை விடுவிக்க முடிவு செய்துள்ளது. தற்போது 6152 ஏக்கர் காணியே அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகிறது. இதில் 1000 ஏக்கரை விடுவித்த பின்னர் எஞ்சிய காணிகளும் படிப்படியாக விடுவிக்கப்படுவதுடன் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
முதலாவதாக விடுவிக்கப்படும் 1000 ஏக்கரில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் நி 284 வலலாய் கிராம சேவகர் பிரிவிலுள்ள 220 ஏக்கர் காணி முதற் கட்டமாக உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் இதில் 1022 குடும்பங்களுக்கு மீள்குடியேற்றம் செய்யும் வகையில் மாதிரி கிராமம் ஒன்றும் அமைக்கப்படும் என மீள் குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதனும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் மேலும் தெரிவிக்கையில், வலலாய் கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்படும் மாதிரிக் கிராமத்தில் பாடசாலை, முன்பள்ளி, ஆய்பத்திரி, வணக்கஸ்தலம், சனசமூக நிலையம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதி களும் நிறைந்த இடமாக அமைக்கப்படும். இக்கிராமத்தில் ஒரு குடும்பத்திற்கு 20 பர்சஸ் காணி வீதம் வழங்கப்படுவதுடன் வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான உதவியும் வழங்கப்படும்.
எஞ்சிய 750 ஏக்கர் காணியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர்த்தப்படுவார்கள். வலி வடக்கு, வலி கிழக்கு பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.