முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறீலங்கா இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 95 ஆவது நாளாகவும் தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள், மூன்று அம்சக் கோரிக்கை களை முன்வைத்து இப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்,
இந் நிலையில், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒட்டுசுட்டான் கற்சிலைமடு கிராமத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் – சரஸ்வதி என்ற வயோதிபத் தாயார் ஒருவர் தனது இரு மகன்மார்களையும் மற்றும் மருமகனையும் (மகளின் கணவன்) தொலைத்து விட்டு கண்ணீர் சிந்தியபடி இந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவரை ஆறுதல் படுத்திய பின்னர் காணாமல்போனவர்கள் தொடர்பில் கேட்டபோது,
எனக்கு 04 பெண் பிள்ளைகளும், 02 ஆண் பிள்ளைகளுமாக 06 பிள்ளைகளு டன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த வேளை கடந்த 1990ஆம் ஆண்டு மூத்த மகன் காணாமல் போயுள்ளார்.
இவர் தொடர்பில் பல இடங்களிலும் தேடி அலைந்த நிலையில், மற்றைய மகன் பரராஜசிங்கம்-சிவபாலன் 2002ஆம் ஆண்டு வவுனியா நகரப் பகுதியில் பொருட்களை வாங்கி வருவதற்காக சென்றிருந்த நிலையில் அவரை வவுனியாவில் வைத்து இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
இக் கைது தொடர்பில், அவருடன் கூடச் சென்றவர்கள் சிவபாலனை இராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக வந்து கூறிய நிலையில் வவுனியாவிற்கு நானும், கணவரும் சென்று பொலிஸ் நிலையத்திலும் மற்றும் இராணுவ முகாம்களிலும் விசாரித்த போதும் தாங்கள் இந்த பெயரில் யாரையும் பிடிக்கவில்லை என்று கையை விரித்து விட்டனர். இதனால் மனமுடைந்த கணவர் பிள்ளைகளை நினைத்து நினைத்து ஏங்கிய நிலையில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் வன்னியில் இடம்பெற்ற கடைசிச் சண்டையின் போது, கற்சிலை மடுவில் இருந்து எனது மகள் குடும்பத்தினர் இடம் பெயர்ந்து தேவிபுரம் பகுதிக்கு செல்லும் வழியில் எனது மருமகனும் காணாமல்போயுள்ளார்.இன்று மூன்று பேரையும் பறிகொடுத்து விட்டு இன்று தனி மரமாக இருந்து எனது வயோதிப நிலையில் இவர்களைத் தேடி அலைந்து வருகின்றேன்.
மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பல அமைப்புகளிடம் முறையிட்டுள்ள நிலையில் எவரும் எனது பிள்ளைகளை மீட்டுத் தரவில்லை. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 94, ஆவது நாளாகவும் தொடர்ந்து ஈடுபட்ட வரும் நிலையில் எனக்கு எனது பிள்ளைகள் பற்றிய தீர்வு கிடைக்க வேண்டும்.
அத்துடன், ஏனையவர்களின் தேடல்களுக்கும் முடிவு கிடைக்க வேண்டும். நான் இறப்பதற்கு முன்பு எனது பிள்ளைகளைப் பார்க்க வேண்டும்.அவர்களுக்கு எனது கையால் சோறு குழைத்து கொடுக்க வேண்டும். இதுதான் தான் எனது கடைசி ஆசையாகும் என தனது மன ஆதங்கத்தை அந்த தாய் கண்ணீருடன் பகிந்து கொண்டிருந்தார்.