மஹியங்கனையில் முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி வாவிக்குள் விழுந்ததால் 7 வயது சிறுவனும் 2 வயது சிறுமியும் உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
6 பேர் பயணித்த முச்சக்கரவண்டி மற்றைய முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகி வாவிக்குள் விழுந்து சுமார் ஒரு கிலோமீற்றர் வரை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரண்டு சிறுவர்கள் முச்சக்கரவண்டியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாவியில் விழுந்த 7 வயது சிறுவனின் சடலம், சுமார் 5 கிலோமீற்றர் தூரத்துக்கு நீரில் அடித்துச் செல்லபட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, 2 வயது பெண் குழந்தையை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சம்பவத்தில் மீகஹாகிவுல,அராவ,கரதகஹமட பிரசேத்தைச் சேர்ந்த திசாநாயக்க முதியன்சலாகே சுவர்ணா மல்காந்தி (21) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.
இவர்களுடன் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த 07 வயதான திசாநாயக்க முதியன்சலாகே கவிஷ்க கயான் எனும் சிறுவனும் இரண்டு வயதான ரஷ்மி திப்திக்கா எனும் சிறுமியுமே காணாமல் போயிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் 17 ஆம் கட்டையருகே இடம்பெற்றது.
மஹியங்கனையிலிருந்து பதுளை நோக்கி ஆறு பேருடன் பயணம் செய்த முச்சக்கரவண்டி எதிர் திசையில் வந்த இன்னுமொரு முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதன் பின்னர், சம்பவ இடத்துக்கு அருகிலிருந்த ‘வியானா’ எனும் வாவிக்குள் விழுந்து சுமார் ஒரு கிலோமீற்றர் வரை அடித்துச் செல்லப்பட்டது.
நீரோடைக்குள் விழுந்தவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்த சில பொதுமக்கள் அவர்களுக்கு உதவ விரைந்து வந்தனர். எனினும் அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததன் காரணமாக மீட்பு பணிகளில் பாரிய சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டன.
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் சாரதி உள்ளிட்ட இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் இருந்துள்ளனர். எனினும் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் மட்டுமே பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். இவர்கள் மீகஹாகிவுல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைப் பலனின்றிய நிலையில் மேற்படி யுவதி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இரண்டு சிறுவர்கள் நேற்று மாலை வரை கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏனைய மூவரதும் நிலை கவலைக்கிடமானதையடுத்து அவர்கள் பதுளை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான மற்றைய முச்சக்கர வண்டியில் சம்பவத்தின்போது சாரதி மட்டுமே இருந்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அச்சாரதி பொலிஸ் பாதுகாப்பின்கீழ் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காணாமல்போன சிறுவர்கள் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகின்ற அதேநேரம் மஹியங்கனை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.