இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இனப்படுகொலையே இடம்பெற்றுள்ளது. எனவே, தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு குறித்து ஐ.நா. விசாரணை நடத்தவேண்டும் என்று வடமாகாண சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை மீது தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையில் இன அழிப்பு தொடர்பான விசாரணையை முன்னெடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பொருத்தமான விசாரணைகளை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்குமாறும் இந்த தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இனப்படுகொலையே இடம்பெற்றது என்று வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்ற பிரேரணையை கடந்த வருடம் சமர்ப்பித்திருந்தார். இந்த பிரேரணையை சமர்ப்பித்து வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் நேற்று முன்தினம் உரையாற்றியதுடன் இந்த தீர்மானமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசாரணையானது 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கும் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியை உள்ளீர்த்ததாக இருக்கின்றபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இன அழிப்பு நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்காலம் முதல் இலங்கையிலுள்ள தமிழர்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழர்களின் வரலாற்று பூர்வமான தாயகத்தைச் சேர்ந்த தமிழர்கள் பரந்தளவில் படிமுறையான மனித உரிமை மீறல்களுக்கு இலக்காகியுள்ளனர். 2009ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட கொடூரங்கள் உச்சமட்டத்தை அடைந்திருந்தன. இலங்கையின் வரலாற்று ரீதியான வன்முறைகள் 60 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுள்ளன. அரச அனுசரணையுடனான தமிழர்களுக்கெதிரான கலவரங்கள், படுகொலைகள், பாலியல் வன்முறைகள், அரசினால் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலாசார, மொழிரீதியான அழிவுகளும் இதில் உள்ளடங்கும். தமிழ் மக்களை அழிப்பதற்கான நோக்கத்தை கொண்ட இந்த அட்டூழியங்கள் இன அழிப்பை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ளன என்றும் இந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கெதிரான அட்டூழியங்கள் 1948ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் சமூகத்தின் ஒருசாராரின் பிரஜாவுரிமை பறிப்பிலிருந்து அந்த இன அழிப்பு தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்து வந்த அரசாங்கங்களால் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிங்களம் மட்டும் சட்டம், 1956ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழ் மக்களுக்கெதிரான கலவரம், பின்னர் 1958, 1983களில் இடம்பெற்ற இனக்கலவரங்கள், இறுதி யுத்தகால இறப்புக்கள், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்குழு அறிக்கை, வட., கிழக்கின் இன்றைய நிலைவரம் தொடர்பாகவும் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இதனைவிட இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணயம், சமாதானம், நீதிக்கான நீடித்த எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து மேம்படுத்துவதற்கும் இந்த சர்வதேச ரீதியான தலையீடு இன்றியமையாதது என்றும் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஏமாற்றுதலை அரசியல் கலாசாரமாக வளர்க்காமல் உண்மையை உலகுக்கு எடுத்துக்காட்டும் உயர்ந்த கலாசாரமாக மாற்றியமைக்கும் நோக்குடனேயே தமிழர்களுக்கெதிரான இலங்கையின் இன அழிப்பு தொடர்பான தீர்மானத்தை சபையில் சமர்ப்பித்துள்ளேன். இந்தப் பிரேரணை உண்மையை உலகுக்கு எடுத்துரைக்கும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து வந்துள்ள சிங்கள அரசியல்வாதிகளின் பேராதிக்க செயல்களால் துயருற்ற தமிழ் மக்களின் துன்பங்களை எடுத்துரைக்கும் ஆவணமாக இது திகழ்கின்றது. இன அழிப்பு தொடர்பான சாசனத்தின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த தீர்மானம் இன அழிப்பை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான கடப்பாடு பற்றி சுட்டிக்காட்டுகின்றது. அதேசமயம், இந்த தீர்மானம் அரசியல்ரீதியான தெரிவோ அல்லது கணிப்பீடோ அல்ல. சர்வதேச சட்டத்துக்கு அமைவானது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மக்களின் உயிழப்புக்களை தடுக்கும்வகையில் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு மேற்குலக நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் வலியுறுத்திய போதிலும் அதற்கான நடவடிக்கை எதனையும் எடுக்காத அப்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், யுத்தத்தை தீவிரப்படுத்தியது. இதனால் தமிழ் மக்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து நிர்க்கதியாகும் நிலை ஏற்பட்டிருந்தது. பெரும் அவலங்களின் பின்னர் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்த யுத்தத்தின்போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகவும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் உரிய விசாரணைகளை நடத்துமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தி வந்தது. இதனையடுத்து அரசாங்கமானது நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தது. இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி தனது பரிந்துரைகளையும் செய்திருந்தது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் பெருமளவானோர் சாட்சியமளித்திருந்தனர். இருந்தபோதிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை தமிழ் மக்களை பூரணமாக திருப்திப்படுத்தவில்லை. ஆனாலும் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையாவது அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் வலியுறுத்தியது. ஆனாலும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனிதஉரிமை ஆணைக்குழுவில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முதலாவது பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்தப் பிரேரணையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி பொறுப்புக்கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இந்த பிரேரணையை உரிய வகையில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமையினால் 2013ஆம் ஆண்டும் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டது. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது. இந்த விசாரணை அறிக்கை அடுத்த மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதை பிற்போடுவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. புதிய அரசாங்கத்துக்கு உள்ளக விசாரணையினை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்ளப்படலாம் என்ற சூழல் தற்போது நிலவுகின்றது.
இந்த நிலையிலேயே வடமாகாண சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இறுதி யுத்தத்தின்போது இன அழிப்பே இடம்பெற்றுள்ளது. எனவே, இதுகுறித்து ஐ.நா. விசாரணை நடத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பொருத்தமான விசாரணை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பிரேரணையில் கோரப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதனை எதிர்பார்த்துள்ளனர் என்பது வெளிப்பட்டிருக்கின்றது. எனவே, தமிழ் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சர்வதேச சமூகம் எதிர்கால செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.