சிரியாவில் ஐ.எஸ். போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இறுதி அமெரிக்க பணயக்கைதியான தொண்டு ஸ்தாபன பணியாளர் கேலா முயலர் கொல்லப்பட்டுள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
அவரது குடும்பத்தினர் மேற்படி செய்தியால் மனமுடைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுதாபம் தெரிவித்துள்ளார்.
ஜோர்தானிய வான் தாக்குதல் ஒன்றிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக ஐ.எஸ். போராளிகள் தெரிவிக்கின்ற அதேசமயம், ஐ.எஸ். போராளிகள் அவரை கொன்றுள்ளனர் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.
கேலா முயலர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது அறியப்படவில்லை என அமெரிக்க கடற்படை அதிகாரிகளில் ஒருவரான ஜோன் கிர்பி கூறினார்.
”நாங்கள் அந்த பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்களை மறக்கப்போவதில்லை” என அவர் தெரிவித்தார்.
ஐ.எஸ். போராளிகள் ஜோர்தானிய விமானி மோஸ் அல் கஸஸ்பெஹ்ஹை உயிருடன் எரித்தமைக்காக அந்தப் போராளிகளை இலக்கு வைத்து வான் தாக்குதலை நடத்தியிருந்த ஜோர்தான், தனது தாக்குதல்களில் கேலா முயலர் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேலா முயலர் 2013 ஆம் ஆண்டு சிரியாவில் வைத்து கடத்திச் செல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு கேலா முயலர் தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் தான் போராளிகளால் மிகுந்த கௌரவத்துடனும் அன்புடனும் நடத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
கேலா முயலரின் பெற்றோர் அவரைப் பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். போராளிகளை தனிப்பட்ட முறையில் வார இறுதியில் தொடர்பு கொண்டதையடுத்தே அவரது மரணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு உத்தியோகத்தர்களும் மேற்படி மரணம் தொடர்பான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் (கேலா முயலர்) எம்மிடமிருந்து எடுக்கப்பட்டு விட்டார். இவ்வளவு காலமானாலும் கேலாவை பிடித்துவைத்து கொன்றதற்கு பொறுப்பான தீவிரவாதிகளை அமெரிக்கா கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார்.
அமெரிக்கா கேலா முயலரை விடுதலை செய்வதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் கேலா முயலரையும் ஏனைய பணயக்கைதிகளையும் மீட்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்த நடவடிக்கை மயிரிழையில் தோல்வியைத் தழுவியதாகவும் அவர் கூறி னார்.
ஏற்கனவே ஐ.எஸ். போராளிகளால் ஊடக வியலாளர்களான ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் ஸொட்லொப் மற்றும் தொண்டு ஸ்தாபன பணியாளரான பீற்றர் காஸிக் ஆகிய 3 அமெரிக்கர்கள் தலையைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பி டத்தக்கது.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் கேலா முயலர் (வயது 26). பெற்றோருக்கு ஒரே மகளான இவர், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வந்தார். சிரியா நாட்டில் பணியாற்றி வந்தபோது, கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அப்போதிருந்து அவர் தீவிரவாதிகளிடம் பணயக்கைதியாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு தொடக்கத்தில், தனது பெற்றோருக்கு கடிதம் எழுதினார். அதைத்தவிர, அவரைப் பற்றி ஒரு தகவலும் இல்லை.
இதற்கிடையே, சிரியா நாட்டில் ஜோர்டான் நடத்திய விமான தாக்குதலில் கய்லா பலியாகி விட்டதாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், அதனை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், ‘கய்லா கடத்தப்பட்டது மற்றும் மரணத்துக்கு காரணமான தீவிரவாதிகளை கண்டுபிடித்து, நீதியின் முன்பு நிறுத்துவோம். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது ஒரு பிரச்சினையே அல்ல’ என்றார்.