ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமானது கடந்த கால விவகாரங்கள் தொடர்பில் கட்டாயம் நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும். ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்படவுள்ள இலங்கை குறித்த அறிக்கை தாமதமானால் அது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று அமெரிக்காவின்
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஈடுபாட்டுடனேயே இருக்கவேண்டும். இது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கான கண்டன நோக்கத்திலான விடயமல்ல என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
ஒரு மாதத்திற்கு முன்னர் மிகவும் ஆச்சரியப்படத்தக்கவகையில் இலங்கையில் எதிரணியிலிருந்து போட்டியிட்ட பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல், சர்வாதிகாரம், அரசகுலத்திற்குரிய அரசியல் போன்றன நிராகரிக்கப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய அத்தியாயத்தைக் காண வேகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளார். எனினும் கடந்தகால காயங்களை மீள் பார்க்காத வண்ணம் அவருடைய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை மனித உரிமை மீறல் குறித்த விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை தாமதமாக்குவதற்கு எதிர்பார்க்கின்றது.
மேலும் இலங்கை அரசாங்கமானது கடந்த கால துஷ்பிரயோகங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை நடத்துவதற்கு அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகளினதும் ஆதரவை எதிர்பார்த்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சுமார் 40 ஆயிரம் தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐக்கியநாடுகள் சபை கூறுகிறது. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் நிராகரித்து வந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் காயங்களை ஆற்றும் செயற்பாடுகளுக்கான வேறுபல ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழர்களை விடுவிப்பதாகவும், இராணுவத்தினால் வர்த்தக நோக்கங்களுக்காக சுவீகரிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளை மீள வழங்குவதாகவும், அரசாங்கம் உறுதியளித்துள்ளது. அத்துடன் வடமாகாணத்திற்கு புதிய சிவிலியன் ஆளுநரை நியமித்துள்ள அரசாங்கம் வெளிநாட்டவர்கள் வடமாகாணத்துக்கு செல்லும்போது காணப்பட்ட பயணத்தடையையும் நீக்கியுள்ளது.
எவ்வாறெனினும் புதிய அரசாங்கத்தின் மிக முக்கிய கரிசனைகளில் ஒன்றாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமானது கடந்த கால விவகாரங்கள் தொடர்பில் கட்டாயம் நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்படவுள்ள இலங்கை குறித்த அறிக்கை தாமதமானால் அது குறித்து விளக்கமளிக்கவேண்டும். இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஈடுபாட்டுடனேயே இருக்கவேண்டும். இது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கான கண்டன நோக்கத்திலான விடயமல்ல.
ஆனால் விசாரணையானது வேகமாகவும், சுயாதீனமாகவும், இருக்கவேண்டும். சாட்சிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படவேண்டும். குற்றவாளிகள் இறுதியில் தண்டிக்கப்படவேண்டும்.