தமிழர் விளையாட்டுக்கழகம் 95 வருடாந்தம் நடாத்தும் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (04.06.2017) ஞாயிற்றுக்கிழமை Garges Les Gonesse பகுதியில் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சார்சல் தமிழ்ச்சங்க தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உதவிப்பொறுப்பாளர் திரு.செல்வா அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 27.07.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செய்தார்.
தொடர்ந்து 95 விளையாட்டுக்கழகக் கொடியினை தமிழர் விளையாட்டுக்கழகம் 95 இன் பொறுப்பாளர் திரு.யூட்ஸ் றமேஷ் அவர்கள் ஏற்றிவைக்க இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டன.
பாரதி இல்லம், காந்தி இல்லம், அன்பு இல்லம், குருகுலம் இல்லம் ஆகிய 4 இல்லங்களினதும் கொடிகளை அவற்றின் பிரதிநிதிகள் ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடர்ஏற்றப்பட்டது. ஒலிப்பிக் தீபத்தை திரு.பொன்ராஜ் குகராஜ், திருமதி வின்ஸ்ரன் தயாநிதி ஆகிய இருவரும் ஏற்றிவைத்தனர். விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து இல்லங்களின் அணிநடை இடம்பெற்றது. அணிவகுப்பு மரியாதையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா,பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.பாலசுந்தரம், சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் தமிழர் விளையாட்டுக்கழகம் 95இன் பொறுப்பாளர் திரு.யூட்ஸ் றமேஷ் போட்டி முகாமையாளர் திரு.இ.இராஜலிங்கம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பிரதம விருந்தினர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்தனர். இல்லங்களுக்கிடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. ஒவ்வொரு போட்டிகளின் நிறைவிலும் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுப் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இல்லங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதைக்காணமுடிந்தது. சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டிகளும், பெரியவர்களுக்கான வேக நடைபோட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. ஏனைய போட்டிகளிலும் வீர வீராங்களைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை பாராட்டத்தக்கது.
சிறப்புவிருந்தினர்களாக சார்சல் நகர பிதா திரு.பிரான்சுவா புப்பொனி(Monsieur François Pupponi) கார்ஜ் சார்சல் துணை நகர பிதா Monsieur Patrick Angrevier சார்சல் நகர விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் முஸ்தபா மொக்தறி (responsable de service sports Monsieur Mustapha MOKHTARI) ஆகியோருடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் அதன் உபகட்டமைப்புக்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சார்சல் நகர பிதா திரு.பிரான்சுவா புப்பொனி மற்றும் துணை நகர பிதா உள்ளிட்ட பலர் சிற்றுரை ஆற்றியிருந்தனர்.
சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர்தனது உரையில் ஒரு விளையாட்டு வீரன் பண்போடும் நேர்த்தியோடும் ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக வளர்த்துச் செல்லப்படவேண்டும் என்ற நோக்கோடு மிகவும் அர்ப்பணிப்போடு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையினர் தமிழர் விளையாட்டுக்கழகம் 95 உடன் இணைந்து இந்தவிளையாட்டுப் போட்டியை நடாத்திவருகின்றனர். இதன் உழைப்புக்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்கள். கடந்தகாலங்களிலும் பார்த்திருக்கின்றீர்கள் இங்கு ஒவ்வொருவருடைய உழைப்பும் மிகவும் பெருமைக்குரியதாக உள்ளதை இங்கு குறிப்பிடவேண்டும் என்று அவருடைய உரை தொடர்ந்தது.
தொடர்ந்து வெற்றியாளர்களுக்கும் வெற்றிபெற்ற கழகங்களுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.
929 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை குருகுலம் இல்லமும் 835 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பாரதி இல்லமும் 473 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தை முறையே அன்பு இல்லமும் காந்தி இல்லமும் பெற்றுக்கொண்டன.
கிண்ணங்களைப் பெற்றுக்கொண்டு வெற்றிக்களிப்பில் அனைவரும் துள்ளிக்குதித்தமை சிறப்பாக இருந்தது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
சார்சலில் கடந்த 17.05.2017 அன்று திறக்கப்பட்ட முதல் மாவீரர் லெப். சங்கரின் நினைவுத்தூபியின் முன்பாக சார்சல் தமிழ் சங்கத்தினர் தாம்பெற்றுக்கொண்ட வெற்றிக்கிண்ணங்களை வைத்து ஒரு நினைவு வணக்கத்தையும் ஏற்பாடு செய்து அதில்வைத்து சார்சல் தமிழ் சங்கத்தலைவர் திரு. டக்ளஸ் அவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)