மாணவர்களுக்கு சரீர ரீதியில் தண்டனை வழங்கக் கூடாது ; வடமாகாண கல்வி அமைச்சர்!

0
502

மாணவர்களுக்கு சரீர ரீதியில் தண்டனை வழங்கக் கூடாது என்று வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.

வவுனியா, கனராயன் குளத்தைச் சேர்ந்த தர்மராசா ஜனார்த்தனன் (17) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கு சரீர ரீதியில் தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானத்தினை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ளனர்.

மாணவனின் மரணம் தொடர்பில் சுட்டிக்காட்டப்படும் ஆசிரியர் மீது துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் த. குருகுலராஜா தெரிவித்தார்.

இதேவேளை தமது நண்பனின் இறப்புக்கு ஆசிரியரே காரணம் என்று குற்றஞ்சாட்டிய சகமாணவர்கள் அவரைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

அவரது இறுதிக் கிரியைகள் நேற்று முன் தினம் அம்பாள்குளம், குறிசுட்டான் குளத்தில் நடந்தபோதே மாணவர்கள் இதனைத் தெரிவித்திருந்தனர்.

‘சிரமதானம் ஒன்றின் போது இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குக் காரணமாக சக மாணவர்களின் முன்பாகத் தண்டனை வழங்கப்பட்டது.

அதனால் மனமுடைந்தே இவ்வாறான முடிவு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் தண்டித்த விதமே இதற்குக் காரணம்.

இந்த ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவனுக்கு அறைந்து மாணவனுக்குக் காது கேட்காத நிலைமையும் காணப்படுகின்றது.

இந்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். வேறு பாடசாலைகளிலும் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்றும் மாணவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ‘ஆசிரியர் தண்டித்தமைக்கும் மாணவன் உயிரிழந்தமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

நாங்களும் படிக்கும் போது தவறு விட்டால் தண்டிக்கப்பட்டோம். அவ்வாறு கற்றே இந்த நிலைமைக்கு வந்துள்ளோம். மாணவர்கள் தவறுகள் விடும்போது தண்டிக்க வேண்டும். அப்போதே அவர்கள் ஒழுக்கமானவர்களாக உயர்வார்கள்.

கனகராயன்குளம் பாடசாலை தற்போது கல்வியில் உயர்கின்றது. அத்தோடு பாடசாலையின் பெயரையும் கெடுக்கக் கூடாது என பாடசாலையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இந்நிலையில்,

சேர் அண்ணா கிருமிநாசினியை குடித்து விட்டான்: காப்பாற்றுங்கள்..  உங்கள் அண்ணா விசம் குடித்தால் எனக்கு என்ன? பதிலளித்த ஆசிரியர்!

சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கோ, என கேட்டபோது உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அங்கிருந்து கேட்கச் சென்ற மாணவனை விரட்டியுள்ளார் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் கடந்த புதன்கிழமை அன்று விசமருந்தி தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் நேற்று (02-06) நடைபெற்றது. இறந்த மாணவனின் சக மாணவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் சிரமாதானம் ஒன்றின்போது இரண்டுமாணவர்களுக்கு ஏற்பட்ட பிணக்கின் காரணமாக உயர்தரம் படித்துவந்த மாணவனை சக மாணவர்கள் முன்னிலையில் அடித்த காரணத்தால் அவமானம் தாங்காது மனமுடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற மாணவன் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டான். எங்கள் சக மாணவனை ஆசிரியர் தண்டித்தவிதமே அவனை அவ்வாறான முடிவை எடுக்க தூண்டியது.

குறிப்பிட்ட ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்த காரணத்தினால் அவனது செவிப்பாறை கிழிந்து காது கேட்காத நிலைமை காணப்படுகிறது. எங்களது பாடசாலை அதிபர் முன்னிலையில் வேறு ஒரு மாணவனுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டபோதும் அதிபர் காத்திரமான நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்ட மாணவர்கள் எங்கள் சக மாணவனின் சாவுக்கு காரணமான ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டவேண்டும் என்பதுடன் வேறு எந்த பாடசாலையிலும் பணியாற்ற அனுமதிக்க கூடாது காரணம் அங்கும் மாணவர்களுக்கு பாதுகாப்ப இல்லாத நிலைமையே காணப்படும் என தெரிவித்தனர்.

எமது மாணவத்தலைவனை தாக்கிய ஆசிரியர் அவனை பழிவாங்கும் நோக்கத்திலேயே தாக்குதலை மேற்கொண்டுள்ளார். என்ன காரணம் என்பதுதான் எங்களுக்க தெரியவில்லை. ஏனென்றால் ஜனார்த்தனன் கிருமிநாசினையை அருந்திய நிலையில் அவனது தம்பி அயலிலுள்ள ஆசிரியரின் வீட்டிற்கு ஓடிச்சென்று சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கோ! என கேட்டபோது உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அவனை அங்கிருந்து விரட்டியுள்ளார். ஆகவே இந்த ஆசிரியருக்கு ஜனார்த்தனனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் இருந்துள்ளது என கருத வேண்டியுள்ளது என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here