இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணைகள் புதிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்துமாயின் அது நிலைமைகளை சிக்கலடையச் செய்துவிடும் என இந்தியா கூறியுள்ளது.
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாணசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானமானது புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை எந்தளவில் பாதிக்கும் என்பதை தற்போதைக்கு அளவிடமுடியாது என்றும் இந்திய அதிகாரிகள் கூறியிருப்பதாக ‘இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லி அதிகாரிகள் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ‘த ஹிந்து’ இந்த செய்தியை வெளியி ட்டுள்ளது. இந்தப் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் ஜெனீவா மாநாட்டில் எந்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச் மாதம் சமர்ப்பிக்கப் படுவது கைவிடப்பட்டால் புதிய அரசாங்கம் வடக்கிற்கு வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப் படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுவது முக்கியம் என இந்தியா எதிர்பார்ப்பதாகவும் ஹிந்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான சர்வதேச விசாரணை முயற்சிகளுக்கு இந்தியா ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கடந்த 2014 மார்ச் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்காது நடுநிலை வகித்திருந்தது.
இந்த நிலையில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரங்களில் முக்கியம் பெற்றிருந்தது. இது தொடர்பில் இந்திய அரசாங்கம் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்திருப் பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.