வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 5 மணிக்கு வவுனியா நகர்பகுதிக்கு சென்றதாக கூறி பேருந்தில் சென்ற இவர் இரவு சுமார் 9 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தனது கடையின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது முச்சக்கர வண்டியை எடுத்து விடும்படியும் தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
நீண்டநேரமாகியும் தனது கணவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் இரவு 10 மணியளவில் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டபோது தொலைபேசி இயங்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை செட்டிகுளம் – பூவரசங்குளம் வீதியில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் சென்றவர்கள் வீதியோரத்தில் சடலம் கிடப்பதை கண்டு செட்டிகுளம் காவல்துறைக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலை இயக்கி வருபவர்கள் என்றும், பலரை வெட்டிச் சரித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் பொலிஸாரால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த தேவா, பிரகாஸ் ஆகிய இருவர் தமிழகம் திருச்சியில் வைத்து இந்திய கியூப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் உரிய ஆவணங்களின்றி தமிழகத்தில் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டிலேயே கியூ பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் டானியல் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
“கும்பலின் தலைவர் எனத் தெரிவிக்கப்படும் பிரசன்னா (சன்னா) என்பவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். ஏனையவர்கள் இலங்கையில் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாகி உள்ளார்கள்” என்று அண்மையில் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், தாம் இலங்கையில் “இன்பம் துன்பம்” என்ற குழுவில் அங்கத்தவர்களாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் இருவரும் ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள்தான் என்று சிறீலங்கா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடு ஒன்றுக்கு தப்பிக்கும் நோக்கிலேயே அவர்கள் இருவரும் திருச்சியில் தங்கியிருந்தனர் என்று தெரிவித்த தமிழக காவல்துறையினர் , இருவரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, தேவா, பிரகாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதையடுத்து இலங்கையிலிருக்கும் அவர்களது கும்பலைச் சேர்ந்தோர் சமூகவலைத் தளங்களில் பல்வேறு கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் தமது முகநூல் பக்கங்களின் படங்களை கறுப்பாக மாற்றியுள்ளனர்.
Home
ஈழச்செய்திகள் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு – வாள்வெட்டு குழு தேவா, பிரகாஸ் திருச்சியில் கைது !