மூன்று சிறுமிகள் மீது வன்புணர்வு; மூதூரில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

0
664

மூதூர் பிரதேசத்தில் சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மூதூரில் நேற்று காலை வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

கிளிவெட்டிப் பாடசாலை, மல்லிகைத்தீவுப் பாடசாலை மற்றும் மூதூர் கிழக்குப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர், நேற்று முன்தினம் பிற்பகல் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மேற்படி சந்தேக நபர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த ஒப்பந்தக்காரரைப் பொதுமக்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பொதுமக்களுடன் கலந்துரையாடியதையடுத்து, ஒப்பந்தக்காரர் விடுவிக்கப்பட்டார். இதன்போது, அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தவிர்க்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் நகரில் வைத்து நேற்று நான்கு பேரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here