சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு புதிய அரசாங்கம் பின்னிற்காது ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உள்ளக விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர் இடம்பெற்றவுள்ளது. இதன்போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அவ்வாறிருக்கையில் இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளதுடன் குறித்த அரசாங்கமும் சுயாதீன உள்ளக விசாரணையையே வலியுறுத்தி வருகின்றது.
அத்துடன் அவ்வறிக்கையை வெளியிடுவது தொடர்பில் காலம் தாழ்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மறுபுறத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவா சென்று பல்வேறு உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டு வருவதுடன் எதிர்வரும் தினங்களில் தமிழ் த்தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் ஜெனீவா நோக்கி பயணமாகவிருக்கின்றனர். அந்நிலையிலேயே கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையானது இலங்கை தொடர்பில் விசாரணை செய்வதற்கு விசேட விசாரணைக்கு குழுவொன்றை நியமித்திருந்தது. அக்குழுவானது நடுநிலையாளர்களாக நெறிகளுக்கு உட்பட்டு தமது விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு அது குறித்த அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் வெளியிடவுள்ளது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் புதிய அரசாங்கமானது உள்ளக விசாரணையை வலியுறுத்தி வருகின்றதுடன் சர்வதேச விசாரணைக்கு எதிரான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. எம்மைப்பொறுத்தவரையில் உள்ளக விசாரணைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. காரணம் உள்ளக விசாரணையொன்று மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.
இந் நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் கடந்த காலத்தில் பல்வேறு விடயங்களுக்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகளில் சுயாதீனத்தன்மையும் நேர்மையும் காணப்படவில்லை என்பது வெளிப்படையானது. அதேபோன்று சில ஆணைக்குழுக்கள் விசாரணை அறிக்கைகளை வெளி
யிட்ட போதும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கங்கள் தயாராகவிருக்கவில்லை. ஆகவே மீண்டும் உள்ளக விசாரணையை எந்த அடிப்படையிலும் எம்மால் ஏற்க முடியாது.
மேலும் உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அது குற்றவாளிகளை பாதுகாப்பதாக அமைந்து விடும். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையானது விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தாது வெளியிடவேண்டும். அதில் கூறப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். இதனை ஜெனீவா செல்லும் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நிச்சயமாக வலியுறுத்துவார்கள். அத்துடன் புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு முன்வரவேண்டும். அதன் மூலம் இந் நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கான நீதி, நியாயம் கிடைக்கும். அதன் பின்னரே தேசிய நல்லிணக்கம் மற்றும் நீண்டகால அரசில் தீர்வு நோக்கி பயணிக்க முடியும் என்றார்.