இனங்களுக்கு இடையில் காணப்படும்தவறான சிந்தனைகளை மாற்றினால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியு ம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையே காணப்படும் வேற்றுமை உணர்வுகளும், சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவின் கோடிக் கரையை கடந்து கின்னஸ் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நீச்சல் தடாகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதுஇந்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இனங்களுக்கு இடையில் காணப்படும் வேற்றுமை உணர்வினை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமாரசாமி விவேகானந்தனுக்கும் இராஜரத்தினம் மாள் விவேகானந்தனுக்கும் சிரேஷ்ட புதல்வனாக 1943-ம் ஆண்டில் வல்வெட்டித்துறை மாநகரில் அவதரித்த ஆனந்தன் அவர்கள் சிறுவயதில் இருந்தே எந்தவொரு காரியத்தை முன்னெடுத்தாலும் அதில் வெற்றிபெற வேண்டும் அதன் மூலம் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயற்பட்டார். கின்னஸ் புத்தகத்தில் குறைந்தது பத்து பதிவுகளையாவது உட்புகுத்த வேண்டும் என்பது அவரின் இளவயது கனவாக இருந்தது.
இவர் சிறுவயதில் இருந்தே கடலில் நீச்சல் அடிப்பதில் வல்லவராக இருந்தார்.அத்துடன் கல்வியிலும் சிறப்புறப்பயின்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமாணிப் பட்டம் பெற்று அதன்பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமாணிப்பட்டம் பெற்று சட்டத்தரணியாக சித்திபெற்று சிறிது காலம் சட்டத்தரணியாக பணியாற்றிய போதும் அத்துறையில் நாட்டம் இல்லாத காரணத்தினால் அதனைக் கைவிட்டுவிட்டு வணிகத்துறையில் கால் பதித்தார்.
1971-ல் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவில் இருக்கும் கோடிக்கரை எனும் ஊரிற்கு அவர்நீந்திக் கரை சேர்ந்தார். இவருக்கு முன் இதே ரேவடி கடற்கரையில் இருந்து 1954-ம் ஆண்டில் அமரர் நவரத்தினசுவாமி அவர்கள் பாக்கு நீரிணையை முதன் முதலாக நீந்திக் கடந்து சாதனை படைத்திருந்தார்.
ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்கள் 20 இற்கும் மேற்பட்ட சாதனைகளை புரிந்த போதும் அவற்றில் 07 சாதனைகள் மட்டுமே கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. எனினும் முதலாவது சாதனையாக 1963ல் வல்வெட்டித்துறையில் இருந்து கோடிக்கரை வரை நீந்திக்கடந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.