கால்நடை சந்தைகளில், பசுக்களை இறைச்சிக்காக விற்பனை செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மற்ற கால்நடை விற்பனைக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் தயாரிக்கப்பட்டன. அவற்றுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த அனில் மாதவ் தவே கடந்த வாரம் காலமாவதற்கு முன் ஒப்புதல் வழங்கினார்.
இதையடுத்து விலங்குகள் வதை தடுப்பு சட்டத் திருத்தங்களின் கீழ் மத்திய சுற்றுச்சூழல் துறை கால்நடைகள் விற்பனைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து 8 பக்க அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில், பசு, எருதுகளை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்கக் கூடாது. விவசாய நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும்தான், சந்தைகளில் கால்நடைகளை விற்க முடியும். விவசாய பயன்பாட்டுக்கு மட்டும்தான் விற்கவும் வாங்கவும் முடியும். பசு, எருது, எருமை, கன்று குட்டி, கறவை மாடுகள், ஒட்டகம் உட்பட கால்நடைகள் விற்பனைக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.
மேலும் நாட்டின் சர்வதேச எல்லையில் இருந்து 50 கி.மீ. தூரத்துக்குள் கால்நடை சந்தைகளை அமைக்கக் கூடாது. அதேபோல் மாநில எல்லையில் இருந்து 25 கி.மீ. தூரத்துக்கு கால்நடை சந்தை அமைக்க கூடாது. மாநிலங்களுக்கு வெளியில் கால்நடைகளை கொண்டு செல்வதாய் இருந்தால், மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
சந்தைகளுக்கு கால்நடைகளை கொண்டு வருபவர்கள், அவற்றை இறைச்சிக்காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். அத்துடன் கால்நடைகளின் அடையாளங்கள், உரிமையாளரின் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
சந்தைகளில் கால்நடைகளின் நலத்தை உறுதி செய்ய வேண்டும். கன்றுகள், தகுதியில்லாத கால்நடைகளை விற்கக் கூடாது. வாகனங்களில் கால்நடைகள் அடைபடாமல் எல்லா வசதிகளுடனும் ஏற்றி செல்லப்படுகிறது என்பதற்கு கால்நடைத் துறை ஆய்வாளரிடம் காட்டாயம் சான்று பெற வேண்டும். விற்பனைக்கு தகுதி இல்லாத கால்நடைகளுக்கு முத்திரை குத்தும் அதிகாரம் ஆய்வாளருக்கு உள்ளது. இனிமேல் மாவட்ட கால்நடை சந்தை கமிட்டியிடம் அனுமதி பெறாமல் கால்நடை சந்தைகளை நடத்தக் கூடாது.
இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.